அண்டை நாடான இலங்கையில், பொருளாதார நெருக்கடி காரணமாக, சில மாதங்களாக புகைந்து கொண்டிருந்த மக்களின் எதிர்ப்பு, நேற்று முன்தினம் பெரிய அளவில் வெடித்தது. தலைநகர் கொழும்புவில் பலத்த பாதுகாப்புடன் கூடிய அதிபர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த பொருட்களை சூறையாடி, அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், அதற்கு சற்று முன்னதாகவே மாளிகையில் இருந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, வெளியேறி விட்டார். அவர், குடும்பத்தினருடன் தனி விமானம் அல்லது கப்பலில் வெளிநாடு தப்பியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. வரும், 13ம் தேதி பதவி விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த, 2010ல் இருந்து, இலங்கை அரசின் வெளிநாட்டுக் கடன் கடுமையாக உயர்ந்தது.
2019ல், வெளிநாட்டுக் கடனின் அளவானது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 88 சதவீதத்தை எட்டியது. இந்தச் சூழ்நிலையில், 2020ம் ஆண்டில் கொரோனா பரவல் பல நாடுகளில் விஸ்வரூபம் எடுத்து, ஊரடங்கு அமலானதால், இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்தது. அத்துடன், விவசாயத் துறையில் ரசாயன உரங்களின் பயன்பாட்டிற்கு, இலங்கை அரசு ஒரேயடியாக தடை விதித்து,
இயற்கை விவசாயத்தை மேம்படுத்த உத்தரவிட்டது. இதுவும், உணவுப் பொருட்கள் உற்பத்தியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியது.’ரசாயன உரங்களின் பயன்பாட்டை படிப்படியாக குறைக்கலாம்’ என்ற யோசனையை அதிபர் ஏற்கவில்லை. இவை உட்பட பல பிரச்னைகளால், 2.2 கோடி மக்கள் தொகை உடைய இலங்கையில், அன்னிய செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டு, எரிபொருள், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் இறக்குமதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இவற்றை எல்லாம், மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். மேலும், எரிபொருள் பற்றாக்குறையால், மக்கள் நீண்ட வரிசையில் நின்று அவற்றை வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். அத்துடன், அடிக்கடி மின்வெட்டும் அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை இறக்குமதி செய்த வகையில் மட்டும், பல நுாறு கோடிகளை சில நாடுகளுக்கு பாக்கியாக, இலங்கை அரசு செலுத்த வேண்டியுள்ளது.
கடந்த மாதத்தில், இலங்கையின் பொருளாதார பணவீக்கமானது, ௫௪.௬ சதவீத அளவுக்கு அதிகரித்தது. வரும் மாதங்களில் அது, ௭௦ சதவீதத்தை தாண்டலாம் என அஞ்சப்படுகிறது. இலங்கை அரசின் தற்போதைய கடன், 52 ஆயிரத்து 500 கோடியை எட்டி விட்டது. மொத்தத்தில் அரசு திவால் நிலைக்கு சென்று விட்டது. பணவீக்கம் அதிகரித்ததால், இலங்கையில் தற்போது, ௬௦ லட்சம் பேர் உணவு பாதுகாப்பின்மை நிலைமையில் உள்ளதாக, சமீபத்தில் ஐ.நா., சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பற்றி எரிந்து கொண்டிருக்கும் இலங்கையில் மாற்றம் நிகழ வேண்டும் எனில், விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். ரசாயன உரங்களின் பயன்பாட்டை முழு அளவில் அகற்றாமல், குறிப்பிட்ட சதவீதம் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். விவசாயிகள் அதிக வருமானம் பெறும் வகையில், புதிய பண்ணை தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும். இதுதவிர, விவசாயம் சாராத துறைகளில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.
குறிப்பாக, சுற்றுலா துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்க வேண்டும். சர்வதேச அளவில் பிரபலமான நிறுவனங்கள் அதிக அளவில் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகளை கட்டும் போது, ஏராளமான சுற்றுலா பயணியர் இலங்கை வருவர். அவர்கள் வாயிலாக இலங்கை மக்களின் வருமானம் அதிகரிக்கும்.இதுதவிர, வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவை மாற்றி அமைப்பது உட்பட, வேறு பல நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்.
இவற்றை எல்லாம் செய்தால் மட்டும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறையும். இந்த சீர்திருத்தங்களை எல்லாம் ஒரே நாளில் செய்து முடிக்க முடியாது என்றாலும், படிப்படியாக செய்வதன் வாயிலாக, மக்களின் இன்னல்களை குறைத்து, நாட்டில் அமைதியை உருவாக்கலாம். புதிதாக பதவியேற்க உள்ள அனைத்துக் கட்சி அரசானது, இதைச் செய்ய வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பு.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்