திட்டமிட்டபடி, வரும் 13 ஆம் தேதி இலங்கை அதிபர் பதவியை, கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய உள்ளதாக, பிரதமர் அலுவலகம் உறுதிப்படத் தெரிவித்து உள்ளது.
அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தலைநகர் கொழும்புவில் உள்ள இலங்கை அதிபர் மாளிகையை சூறையாடிய போராட்டக்காரர்கள், மாளிகையை முழுவதுமாக தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே, இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்து உள்ளதாக, ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.
இரண்டே மாதத்தில் முடிவுக்கு வரும் ரணில் ஆட்சி? -இனி என்னவாகும் இலங்கை!
இதை அடுத்து, ரணில் விக்ரமசிங்கே வீட்டுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதன் தொடர்ச்சியாக, வரும் 13 ஆம் தேதி அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக, கோத்தபய ராஜபக்சே உறுதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், திட்டமிட்டபடி, வரும் 13 ஆம் தேதி இலங்கை அதிபர் பதவியை, கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய உள்ளதாக, பிரதமர் அலுவலகம் இன்று அறிக்கை மூலம் உறுதிப்படத் தெரிவித்து உள்ளது. இலங்கை அரசியல் அமைப்பின் சட்டப்படி, சபாநாயகருக்கு கடிதம் வாயிலாக, அதிபர், ராஜினாமா கடிதத்தை அனுப்பும் போது மட்டுமே அது முறையாக ஏற்றுக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த நடைமுறையை, அதிபர் கோத்தபய ராஜபக்சே பின்பற்றவில்லை.