திராவிடம் பற்றிய ஆளுனர் பேச்சில் பீதி வெளிப்படுகிறது: டி.ஆர் பாலு கண்டனம்

தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர். பாலு, ஆளுநரை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு: தமிழ்நாடு ஆளுநர் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தினந்தோறும் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வதை தனது வழக்கமாக வைத்திருக்கிறார். சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்லி தன்னை நோக்கி அனைவரையும் பார்க்க வைக்கும் நோக்கத்துடன் இப்படி ஆளுநர் நடந்து கொள்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்படும் வண்ணம் அவரது கருத்துக்கள் தமிழ்நாட்டின் பொதுவெளியில் அமைந்து வருகின்றன.

தமிழகத்திற்கு இதுவரை வந்து பணியாற்றிய ஆளுநர்கள் யாரும் இதுவரை இதுபோன்ற கருத்துகளைப் பொதுவெளியில் சொல்லி சர்ச்சைகளில் இறங்கியது இல்லை என்று சொல்லும் வண்ணம், இன்றைய ஆளுநர் அவர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

 சனாதனம் குறித்து சில வாரங்களுக்கு முன்னால் அவர் சில கருத்துகளைச் சொன்னார். அப்போதே அதற்கு உரிய விளக்கத்தை கழகத்தின் சார்பில் நான் அளித்தேன். இந்த நிலையில், ‘திராவிடர்’ குறித்து ஆளுநர் அவர்கள் அடுத்த விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

 ‘திராவிடர்’ என்று அடையாளப்படுத்திப் பிரித்ததே ஆங்கிலேயர்கள்தான் என்று ஆளுநர் அவர்கள் சொல்லி இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆங்கிலேயர்களது வருகை கி.பி.1600 ஆம் ஆண்டு என வைத்துக் கொண்டால், அதற்கு முன்னதாக ‘திராவிடம்’ என்ற வார்த்தை இந்தியாவில் இல்லையா? இல்லை என்று ஆளுநர் அவர்கள் சொல்கிறாரா? இப்படி நிரூபிப்பதன் மூலமாக அவர் என்ன சொல்ல வருகிறார்?

ஆரியர் – திராவிடர் என்ற சொற்கள் எல்லாம் எப்போது உருவானது என்பது குறித்து மிகப்பெரிய வரலாற்றாசிரியர்கள் பல நூறு புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள். அது குறித்து ஒன்றிரண்டு புத்தகங்களை மேலோட்டமாக ஆளுநர் அவர்கள் வாசித்தாலே ஆரியர் – திராவிடர் என்ற உண்மையை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

அசல் மனு தரும சாஸ்திரத்தின் பத்தாவது அத்தியாயத்தின் 33  ஆவது சூத்திரம் என்ன சொல்கிறது என்றால்,”பெளண்ட்ரகாஷ் செளட்ர த்ரவிடா காம்போஜாயவநா ஷகா பாரதா பஹ்ளவாஷ் சீநா கிராதா தரதா கஷா” – என்கிறது.  இத்தேசத்தை ஆட்சி செய்தவர்கள் அனைவரும்  சூத்திரனாய் விட்டார்கள் – என்கிறது மனுசாஸ்திரம்.

மகாபாரதத்தில் ‘திராவிடம்’ வருகிறது. காஞ்சிபுராணத்தில் ‘திராவிடம்’ இருக்கிறது. தாயுமானவர் ‘திராவிடம்’ சொல்கிறார். தஸ்யூக்கள், அடிமைகள், திராவிடர்கள் சூத்திரர்கள் ஆக்கப்பட்டார்கள் என்கிறார் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.

இத்தகைய இந்தியச் சமூக வரலாற்றின் சாதாரணச் செய்திகளைக் கூட அறிந்து கொள்ளாமல் ஆங்கிலேயர்கள் வந்து தான் ‘திராவிடர்கள்’ என்று பிரித்தார்கள் என்று சொல்வது வரலாறு அறியாதவர் கூற்று. அல்லது வரலாற்றை மறைப்பவர்களின் கூற்று ஆகும்.

‘திராவிடம்’ என்பது இடப்பெயராக, இனப்பெயராக, மொழிப் பெயராக  இருந்தது. வடக்கு – தெற்கு என்ற பாகுபாடு இடப்பாகுபாடாக இருந்தது. ஆரியன் – திராவிடன் என்ற இனப்பாகுபாடாக இருந்தது. தமிழ் – சமஸ்கிருதம் என்ற மொழிப்பாகுபாடாக இருந்தது. இப்படி காலம்காலமாக இருந்த இன – இட – மொழிப்பாகுபாட்டை முன்வைத்து தமிழர் தம் அரசியலை – முன்னேற்றத்தை – எழுச்சியை உருவாக்க முனைந்ததுதான் திராவிட இயக்கம் ஆகும். கடந்த 100 ஆண்டு கால திராவிட இயக்கத்தின் வரலாறு என்பது இதில் தான் அடங்கி இருக்கிறது.

 ஆயிரமாண்டுப் பள்ளத்தை 100 ஆண்டுகளில் நிரப்பி வருகிற இயக்கம் தான் திராவிட இயக்கம் ஆகும். இதனைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் ‘திராவிடம்’ என்ற சொல்லைப் பார்த்தாலே மிரண்டு கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய பீதிதான் ஆளுநர் அவர்களது பேச்சில் வெளிப்படுகிறது.

மன்னர்கள், குறுநில மன்னர்கள், சமஸ்தானங்கள் – என பிரிந்து கிடந்த நிலப்பரப்பை ஒன்றாக்கி ‘இந்தியா’வாக ஆண்டது பிரிட்டிஷ் அரசு. இங்கிருந்த சாதி – மத – இன – மொழி – எல்லை வேற்றுமைகளை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, இந்த வேற்றுமைகள் அனைத்தும் அவர்களால் உருவாக்கப்பட்டது என்று சொல்வது வரலாற்றை மறைப்பது ஆகும். வேத கால வரலாற்று இலக்கியங்களை ஆளுநர் அவர்கள் வாசித்தாலே இத்தகைய வேற்றுமைகளின் பிதாமகர்கள் யார் என்பதை அவர் உணரலாம்.

பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழ் இன்று இந்தியா இல்லை. பா.ஜ.க. ஆட்சியில்தான் இன்று இந்தியா இருக்கிறது. அதே வேற்றுமைகளை நீக்கும் செயல்கள் என்னென்ன என்று பார்த்து அதனை முன்னெடுப்பதற்கு தன்னால் முடிந்த காரியங்களை ஆளுநர் அவர்கள் செயல்படுத்தலாம். மற்றபடி கடந்த கால வரலாற்றுக்கு கற்பனை முலாம் பூசி, உண்மையான பிரச்சினைகளைத் திசை திருப்ப முன்வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கவர்னர், கவர்னர் ஜெனரல் போன்ற பதவிகள் எல்லாம்கூட பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டவை தான் என்பதையும் நினைவூட்டுவதோடு,  தமிழக ஆளுநர் தன் பதவியேற்பின்போது,  அரசியல் சட்டத்தின்மீது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராக இத்தகைய கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

என்று அவர் அறிக்கையில் குறிப்பிடுள்ளார்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.