பெங்களூரு: கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மேலும் நிலச்சரிவால் பல கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. கனமழையால் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 51 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை
கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்த மழை பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக மலைநாடு மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா, கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, வடகர்நாடக மாவட்டங்களான பீதர், பாகல்கோட்டை, ஹாவேரி, பெலகாவி, தார்வார், கலபுரகி ஆகிய பகுதிகளில் இடைவிடாது பலத்த மழை கொட்டி வருகிறது.
தலைநகர் பெங்களூருவில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள்
தட்சிண கன்னடா மாவட்டத்தில் கடந்த 11 நாட்களாக பெய்து வரும் கனமழையால் நேத்ராவதி, குமாரதாரா,பல்குனி ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேத்ராவதி ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன்காரணமாக நேத்ராவதி ஆற்றங்கரையோரத்தில் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மேலும் ஆற்றங்கரையோரத்தில் உள்ள பாமேனமங்களூரு, காஞ்சிகார், ஜக்ரிபெட்டு, கைகுஞ்சே, பஸ்திபடப்பு உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.அங்கு தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், நீச்சல் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கு வசிக்கும் மக்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குமாரதாரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றுக்குள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்குனி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அட்டியப்பாடி, முகேர் குத்ரு கிராமங்கள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அந்த கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. முகேர் குத்ரு கிராமத்தை வெள்ளம் சூழ்ந்து தீவு போல காட்சி அளிக்கிறது. இதனால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2 பேர் சாவு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மஞ்சேஸ்வர்-சுப்பிரமணியா சாலையில் உள்ள கனியூர் பகுதியில் வேகமாக சென்ற கார் ஒன்று, பாலத்தின் தடுப்பை உடைத்து கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் காரில் இருந்த 2 பேரும் காருடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இதுபற்றி அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர், நீச்சல் வீரர்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்டநேர போராட்டத்துக்கு பிறகு நேற்று காலை கார் மீட்கப்பட்டது. ஆனால் காருக்குள் இருந்த 2 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
அவர்களை மீட்க மீட்பு குழுவினர் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. ஆனாலும் மீட்பு குழுவினர் ரப்பர் படகு உதவியுடன் 2 பேரின் உடல்களையும் தேடி வருகிறார்கள். அவர்கள் விட்டலாவை சேர்ந்த தனுஷ் (வயது 26), அவரது உறவினர் மற்றொரு தனுஷ் (21) என்பது தெரியவந்தது.
நிலச்சரிவு
தொடர் கனமழை காரணமாக ஆகும்பே மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. உடுப்பி மாவட்டம் சோமஸ்வரா பகுதியில் இருந்து 3-வது கொண்டை ஊசி வளைவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் உடுப்பி-சிவமொக்கா இடையே போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இருபுறமும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் நிலச்சரிவு சரி செய்யும் பணி நடந்தது.இதனால் வாகனங்களை போலீசார் திருப்பி விட்டனர். மேலும் ஆகும்பே சோதனைச்சாவடியிலும், சோமேஸ்வர் சோதனைச்சாவடியிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
இதேபோல், சார்மடி மலைப்பாதையில் ராட்சத மரம் சாய்ந்து விழுந்து சிக்கமகளூரு-மங்களூரு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் சந்திர திரிகோண மலையிலும், பாபாபுடன் கிரி மலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு பாறைகள் உருண்டு வருவதாலும், மரங்கள் முறிந்து விழுவதாலும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் கார், மோட்டார் சைக்கிள் தவிர கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெண் பலி
கொப்பா தாலுகாவில் குட்டேதொட்டா கிராமத்தின் சாலை, ஒரநாடு-சிருங்கேரி சாலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நிலச்சரிவை சரி செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப்பகுதியில் 5 வீடுகள் மீது மலை சரிந்து விழும் அபாயம் இருப்பதால், அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கலசா தாலுகா அரப்பனஹள்ளியை சேர்ந்த பிரியங்கா என்ற பெண் நேற்று ஒரநாடு பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு மரம் சாய்ந்து பிரியங்கா மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கம்பதகட்டே கிராமத்தில் ஏரி உடைந்து தண்ணீர் கிராமத்துக்குள் புகுந்தது. இதனால் அந்த கிராமம் தண்ணீரில் தத்தளிக்கிறது.சிவமொக்காவில் பெய்து வரும் தொடர் கனமழையால் மாவட்டத்தில் 58 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 4 வீடுகள் முற்றிலும் இடிந்துள்ளது. மேலும் 25 ஹெக்டேரில் விளைநிலத்துக்குள் தண்ணீர் புகுந்து நாசமாகி உள்ளன. 12 ஆற்றுப்பாலங்கள் சேதம் அடைந்துள்ளன. ஏற்கனவே துங்கா அணை நிரம்பி உள்ள நிலையில், லிங்கனமக்கி அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்றழைக்கப்படும் ஆகும்பே பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 245 மில்லி மீட்டர் மழை கொட்டி உள்ளது.
குடகு
குடகு மாவட்டத்தில் ஏற்கனவே பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், நேற்றும் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மடிகேரி அருகே கொய்நாடு பகுதியில் அரசு பள்ளிக்கு பின்புறம் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பள்ளிக்கூட கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் பிரம்மகிரி மலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தலைக்காவிரியில் கொட்டி வரும் கனமழையால் காவிரி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பாகமண்டலா-நாபொக்லு சாலையில் 2 அடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. முக்கொட்லு பகுதியில் விளைநிலத்துக்குள் தண்ணீர் புகுந்தது. கொய்நாடு, ஹம்மியாலா, முக்கொட்லு கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
கே.ஆர்.எஸ்., கபினி
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. 124.80 அடி ெகாள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 123.20 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 42,633 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 26,143 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நிரம்ப இன்னும் ஒரு அடியே பாக்கி உள்ளது.
மேலும் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 2,282.12 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 26,583 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 51,143 ஆயிரம் கனஅடி தண்ணீர் அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி செல்கிறது.
கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம்
மேலும் வடகர்நாடக மாவட்டங்களான ஹாவேரி, பீதர், பாகல்கோட்டை, பெலகாவி, தார்வார், கலபுரகி பகுதிகளிலும் இடைவிடாது பலத்த மழை கொட்டுகிறது. மராட்டியத்திலும் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சிக்கோடி பகுதியில் கிருஷ்ணா ஆற்றங்கரையோரத்தில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
மேலும் விளைநிலங்களும் தண்ணீரில் மூழ்கின. மேலும் பாலங்களை மூழ்கடித்தப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்குள்ள அலமட்டி மற்றும் துங்கபத்ரா, பசவசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.தொடர் கனமழை காரணமாக பெலகாவியில் உள்ள கோகாக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் அங்கு சில இளைஞர்கள் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.கர்நாடகத்தில் கொட்டி வரும் பேய் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ரங்கணதிட்டு பறவைகள் சரணாலயத்தில் படகு சவாரி ரத்து
குடகில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணை நிரம்ப இன்னும் ஒரு அடி மட்டுமே பாக்கி உள்ளதால், அணையில் இருந்து வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக ஸ்ரீரங்கப்பட்டணா ரங்கணதிட்டு பறவைகள் சரணாலயத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், ரங்கணதிட்டு பறவைகள் சரணாலயத்தில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிக்கமகளூருவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை
கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, குடகு மாவட்டங்களில் 9-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் சிக்கமகளூரு மாவட்டத்தில் மேலும் 2 நாட்களுக்கு, அதாவது இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்
கர்நாடகம், தெலுங்கானா, கேரளா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கர்நாடகத்தில் குறிப்பாக கடலோர மாவட்டங்ககளில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் நாட்டின் மத்திய பகுதி மற்றும் மேற்கு கடலோர பகுதிகளில் இன்னும் 5 நாட்கள் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கனமழை காரணமாக பெரும் சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளதால் மழை பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முன்எச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கும்படியும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.