திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப்புக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று கேரள முன்னாள் பெண் டிஜிபி லேகா கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கேரள சிறைத்துறை டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்ற லேகா தனது யூடியூப் சேனலில் நடிகை பலாத்காரம் குறித்த பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டபோது நான் சிறைத்துறை டிஜிபியாக இருந்தேன். இந்த வழக்கில் கைதான சுனில்குமார் மிக மோசமான குற்றவாளி என்பது எனக்கு தெரியும். எனவே அவர் கைது செய்யப்பட்டபோது முதலில் எனக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. பலாத்கார சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குள் சுனில்குமாரை போலீசார் கைது செய்துவிட்டனர். அவர் போலீஸ் காவலில் இருந்த போது கூட நடிகர் திலீப்புக்கு பங்கு உண்டு என்பது குறித்து எதுவும் கூறவில்லை. சம்பவம் நடந்து நான்கரை மாதங்களுக்குப் பிறகு தான் திலீப்புக்கு பங்கு இருப்பதாக சுனில்குமார் கூறியதாக போலீசார் கூறினர். அப்போதே எனக்கு அதில் சந்தேகம் ஏற்பட்டது. இந்த வழக்கில் திலீப்பின் பெயர் அடிபட்டபோது அவர் அவ்வாறு செய்ய மாட்டார் என்று அப்போது இருந்த சில அமைச்சர்களும் என்னிடம் கூறினர். திலீப்பை இந்த வழக்கில் சிக்க வைத்ததில் போலீசுக்கும் முக்கிய பங்கு உண்டு. சில முக்கிய நபர்கள் கேட்டுக் கொண்டதால் தான் போலீசார் திலீப்புக்கு எதிராக சில நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சுனில்குமார் மிக மோசமான குற்றவாளி என்று எனக்குத் தெரியும். நான் 18 வருடங்கள் எர்ணாகுளம் மாவட்டத்தில் பணியில் இருந்தேன். அப்போது மலையாள சினிமா நட்சத்திரங்கள் பலர் என்னிடம் உதவி கேட்டு வந்து உள்ளனர். அவர்கள் கூறிய பல சம்பவங்கள் என்னை திடுக்கிட வைத்தன. நல்லவன் போல நடித்து பல நடிகைகளிடம் நெருங்கிப் பழகி வந்து உள்ளான். பின்னர் அவர்களை காரில் அழைத்துச் சென்று மிரட்டி ஆபாச படங்களை எடுத்து உள்ளான். பிறகு அந்த படங்களை காண்பித்து மிரட்டி பணம் வாங்கியும், பல நடிகைகளை பலாத்காரம் செய்தும் உள்ளான். இதுகுறித்து ஏன் போலீசில் புகார் செய்யவில்லை என்று நடிகைகளிடம் நான் கேட்டபோது, வெளியே தெரிந்தால் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடுமே என்பதால் புகார் செய்யவில்லை என்று அவர்கள் என்னிடம் கூறினர். இவ்வாறு முன்னாள் டிஜிபி லேகா தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார். இந்த தகவல் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.