நேஷனல் ஹெரால்டு வழக்கில், வரும் 21 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு, அமலாக்கத் துறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவன விற்பனையில் நடந்த சட்ட விரோத பண மோசடி குறித்து, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி ஆஜராகக் கோரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
அந்த சமயம், கொரோனா வைரஸ் தொற்றால் சோனியா காந்தி பாதிக்கப்பட்டதால், அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. இதை அடுத்து, விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து சிறிது கால அவகாசம் கேட்டு, சோனியா காந்தி தரப்பில் அமலாக்கத் துறையிடம் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட அமலாக்கத் துறை, அவருக்கு புதிய சம்மனையும் அனுப்பியது.
இதற்கிடையே, கொரோனா தொற்றுக்கு பிந்தைய பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட சோனியா காந்தி, டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சில நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர், குணமடைந்த பிறகு, வீட்டிற்கு திரும்பினார்.
இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு, வரும் 21 ஆம் தேதி, டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி, சோனியா காந்திக்கு, அமலாக்கத் துறை அதிகாரிகள் புதிய சம்மன் அனுப்பி உள்ளனர். முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தியிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக, சுமார் 5 நாட்கள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.