"பணம் இல்லனா ஆம்புலன்ஸ் வராது" – 2 வயது தம்பியின் உடலுடன் சாலையில் அமர்ந்திருந்த சிறுவன்!

ஆம்புலன்ஸ் தர மருத்துவமனை நிர்வாகம் மறுத்ததால் தனது 2 வயது தம்பியின் உடலை மடியில் சுமந்து கொண்டு சிறுவன் ஒருவன் சாலையோரம் அமர்ந்திருந்த அவல சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள பட்ஃப்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் பூஜாராம். 48 வயதான கூலித்தொழிலாளியான இவருக்கு, ஒரு மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே, அவரது 2 வயது குழந்தையான ராஜாவுக்கு கடந்த வாரம் திடீரென கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அதிக கட்டணம் ஆகும் என்பதால், மொரேனா மாவட்ட அரசு மருத்துவமனையில் தனது குழந்தையை கொண்டு சேர்த்தார் பூஜாராம். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் நேற்று குழந்தை இறந்து போனது. இதனால் பூஜாராம் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
image
இதையடுத்து, குழந்தையின் உடலை வீட்டுக்கு கொண்டு செல்வதற்காக மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநரை பூஜாராம் அணுகியிருக்கிறார். ஆனால் அந்த ஓட்டுநரோ, 1,500 ரூபாய் தந்தால் தான் ஆம்புலனஸ் வரும் எனக் கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகத்திடமும் ஆம்புலன்ஸ் தருமாறு பூஜாராம் மன்றாடினார். ஆனால் நிர்வாகமும் அதே பதிலையே தந்துள்ளது. மிக ஏழ்மை நிலையில் இருக்கும் பூஜாராமுக்கு 1,500 ரூபாயை புரட்ட முடியவில்லை.
இதனால் தனது மூத்த மகனான குல்ஷானை (8) மருத்துவமனை அருகில் இருந்த பிளாட்ஃபார்மில் அமர வைத்து அவரது மடியில் குழந்தை ராஜாவின் உடலை கிடத்தினார் பூஜாராம். பின்னர், குறைந்த கட்டணத்தில் ஏதாவது வாகனம் கிடைக்குமா என தேடிப்பார்க்க பூஜாராம் சென்று விட்டார்.
image
ஆதலால், தனது 2 வயது தம்பியின் உடலை மடியில் வைத்துக் கொண்டு, கண்களில் கண்ணீருடன் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட அறிய முடியாமல் சிறுவன் குல்ஷான் சாலையோரம் அமர்ந்திருந்தான்.
இதனைக் கண்ட பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். மேலும், குழந்தையின் உடலுடன் சிறுவன் அமர்ந்திருப்பதை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து, போலீஸார் அங்கு வந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி ஆம்புலன்ஸில் குழந்தை ராஜாவின் உடலை ஏற்றி அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து விசாரித்து, மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மொரேனா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பணம் இல்லாத காரணத்தால், குழந்தையின் உடலை ஏற்றிச் செல்ல கூட ஆம்புலன்ஸ் தர மறுக்கும் அளவுக்கு கல்நெஞ்சம் படைத்த மனிதர்கள் நம் நாட்டில் இருக்கதான் செய்கிறார்கள் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சாட்சியாக இருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.