பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் தொடர்பான அட்டவணை வெளியீடு!

சென்னை: தமிழ்நாட்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி,  தடகளப் போட்டிகள் நவம்பர் 10-ந் தேதி தொடங்கி 14-ந்தேதி நிறைவு பெறும் என்றும்  பிப்ரவரி 19-ந் தேதி வரை பல்வேறு நிலைகளில் போட்டிகள் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக  பள்ளிக்கல்வி இயக்குரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், உடற்கல்வி ஆய்வாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகஅரசின் அரசாணையின்படி கடந்த 2019-2020-ம் ஆண்டில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அதற்கு பிறகு 2020-2021, 2021-2022 ஆகிய 2 கல்வியாண்டுகளில் கொரோனா காரணமாக விளையாட்டுப் போட்டிகளை நடத்த இயலவில்லை.

தற்போது இந்த கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 6-ம் வகுபபு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் 14,17,19 வயது பிரிவில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு புதிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தும் வகையில் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளையும் (குறுவட்டம் முதல் மாநில அளவில்), பல்வேறு நிலைகளில் (குடியரசு தின விளையாட்டுப் போட்டி, பாரதியார் நாள் குழு, தடகள போட்டிகள் மற்றும் புதிய விளையாட்டு போட்டிகள்) நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிகள் அனைத்தையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், உடற்கல்வி ஆய்வாளர்கள் மூலம் உத்தேச செயல் திட்ட அட்டவணையின் அடிப்படையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமலும், உரிய பாதுகாப்புடனும் நடத்த வேண்டும்.

14, 17, 19 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கு குறு வட்ட அளவிலான போட்டிகள் வருகிற 27-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 30-ந்தேதி நிறைவு பெறும்.

இதையடுத்து அதே வயதுக்கு உள்பட்டோருக்கான வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் செப்டம்பர் 2-ந்தேதி தொடங்கி அக்டோபர் 31-ந்தேதி முடிவடையும்.

இதையடுத்து அந்த மாணவர்களுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நவம்பர் 10-ந் தேதி தொடங்கி 14-ந்தேதி நிறைவு பெறும்.

இதைத் தொடர்ந்து 19 வயதுக்கு உள்பட்ட மாநில அளவிலான குழுப் போட்டிகள் (பாரதியார் நாள்) நவம்பர் 22-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி முவடையும்.

இதையடுத்து 17 வயதுக்கு உள்பட்ட மாநில அளவிலான குடியரசு தின போட்டிகள் நவம்பர் 30-ந் தேதி தொடங்கி டிசம்பர் 4-ந்தேதி வரை நடைபெறும்.

இந்தப் போட்டிகளைத் தொடர்ந்து மாநில அளவிலான புதிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடத்தப்படும். தொடர்ந்து பிப்ரவரி 19-ந் தேதி வரை பல்வேறு நிலைகளில் போட்டிகள் நடைபெற உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.