பழங்குடியினச் சான்றிதழ் கிடைக்காத விரக்தியில் தற்கொலை: முதியவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க முதல்வரிடம் கோரிக்கை

சென்னை: சாதிச்சான்றிதழ் பெறமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட முதியவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இன்று விவசாய சங்கத்தினர் முதல்வரிடம் நேரில் சந்தித்து அளித்தனர்.

இதுகுறித்து இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை தலைமைச செயலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் மாநில செயலாளர் சாமி.நடராஜன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் இரா.சரவணன், குறுமன்ஸ் பழங்குடி மககள் சங்கத்தின் மாநில தலைவர் எல்.சிவலிங்கம் ஆகியோர் சந்தித்து விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து பேசினர்.

அப்போது முதல்வரிடம், ”நெல் கொள்முதல் அரசின் சார்பில் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும், தனியாரிடம் விடக்கூடாது என்றும், குறுவை சாகுபடிக்கு பயிர்க்காப்பீடு செய்வதற்குரிய அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்” என்றும், ”கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலையை அறிவிக்க ஏதுவாக, பங்கீட்டுமுறை சட்டத்தை ரத்து செய்திட வேண்டும்” என்றும், வலியுறுத்தப்பட்டது.

அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ”நெல் கொள்முதல் செய்வதில் தனியாரை ஈடுபடுத்தும் யோசனை இல்லை” என்றும், ”அரசு கொள்முதல் தொடரும்” என்றும், ”பயிர்க்காப்பீடு குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்” என்றும் தெரிவித்தார்.

மேலும், ”தமிழகத்தில் வன உரிமைச்சட்டம் 2006 அமலாக்கம் மிகவும் தாமதமாக நடைபெறுகிறது. எனவே இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கு என்று சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும்.

குறுமன்ஸ், கொண்டாரெட்டீஸ், மலைக்குறவன் ஆகிய பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கப்படாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொண்டாரெட்டி பழங்குடியினத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் தனது இனத்திற்கு சான்றிதழ் வழங்கப்படாத துயரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவருடைய துணைவியாருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உதவிட வேண்டும்.

கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கான வாடகையைக் குறைக்கவும், குடியிருக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று வெளியேற்றாமல் வாடகை தாரர்களாக அங்கீகரித்து முறைப்படுத்த வேண்டும்” என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்தார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.