பாலம்! | குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

அந்த மூதாட்டியின் பெயர் மரியம்மாவா அல்லது மாரியம்மாவா என்பதில் அந்தப்பகுதிப் பெண்களுக்கு எப்பொழுதுமே ஒரு சிறு சந்தேகம். ஆனால் அந்த மூதாட்டிக்கோ அதைப்பற்றிய கவலையெல்லாம் என்றுமே வந்ததில்லை. கிறிஸ்தவர்கள் வீட்டில் மரியம்மா என்றார்கள். இந்துக்களோ மாரியம்மா என்றழைத்தார்கள். எல்லார் வீட்டிலும் அவர் சேவகம் உண்டு.

ஏசுவோ, சிவனோ! எல்லாம் சாமிதானுங்களே!தீபாவளியோ,பொங்கலோ,கிறிஸ்துமசோ!

எல்லாம் பண்டிகை தானுங்களே! சேர்ந்து கொண்டாடினா எல்லாப் பண்டிகைகளுக்கும் தனிச் சிறப்பே வந்துடுமில்ல!

துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, மாவு மில்லுக்குச் சென்று மாவு அரைத்து வருவது, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது, கைக்குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, வற்றல், வடாம் போடுபவர்களுக்கு உதவுவது, இப்படி எந்த வேலையாக இருந்தாலும், மன நிறைவோடு ஆத்மார்த்தமாக அந்த மூதாட்டி செய்து வந்ததால், அந்த ஏரியாவில் அவருக்கு மவுசு ஜாஸ்தி!

திரைப்படமொன்றில் விவேக் ஏரியா பிரிப்பதைப் போல் அல்லாமல், அந்த ஏரியா முழுமைக்கும் அவர்தான் ராணி. எப்பொழுதும் முகத்தில் சாந்தம் குடியிருக்க, இதழ்களில் புன்முறுவல் பொங்க, அவர் வெளியில் சென்றால், எதிரே வருவோர், போவோரெல்லாம் ஒரு புன்முறுவலாவது சிந்தாமல் அவரைக் கடக்க முடியாது.

Representational Image

பெண்களுக்கான சராசரி உயரத்தை விடச் சற்றே அதிக உயரம்!ஒரு கால் மட்டும் அதிகமான சதைப்பற்றுடன். யானைக் கால் வியாதி என்று சிலர் சொன்னார்கள். அதைப்பற்றிய கவலையெல்லாம்பட அவருக்கு நேரமும் இருந்ததில்லை. எண்ணமும் வந்ததில்லை!

எந்த வீட்டிலும், யாரிடமும் அதிகமாக எதிர்பார்க்காத அந்தக் குணம் பலருக்கும் பிடித்துப் போனதாலேயே அவர் அந்தப் பகுதியில் சிறப்புப் பெற்றார். அரசியல் கூட்டங்களாகட்டும், விளையாட்டுப் போட்டிகளாகட்டும், எல்லா இடங்களிலும் மூதாட்டியின் முகம் முகாம் போட்டிருக்கும். மந்திரியிலிருந்து மாவட்ட ஆட்சியர் வரை எந்த சங்கோசமும் இல்லாமல் பேசும் அவரது இயல்பைக் கண்டு பலரும் வியந்திருக்கின்றனர். உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லும் அந்தப் பாங்கு அவருக்கு மட்டுமே வாய்த்ததோவென்று பலரும் ஆச்சரியப்படுவர்.

ஒரு முறை ஏதோ விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைக்க வந்த மாவட்ட ஆட்சியரிடம், ”குப்பை கூளமா கிடந்த தெருவையெல்லாம் நீங்க வர்றீங்கன்னுதான் சாரு சுத்தம் செஞ்சாங்க! அப்படியே அடிக்கடி சுத்தம் செய்யச் சொல்லிட்டுப் போங்க சாரு!” என்று எதார்த்தமாகச் சொல்ல, அந்த எதார்த்தத்தை ரசித்த ஆட்சியர், அங்கேயே உரிய அலுவலர்களைக் கூப்பிட்டு ஆணை பிறப்பிக்க, அதன்பிறகு அந்த ஏரியாவில் குப்பை, கூளங்களைப் பார்ப்பது அரிதாகிப் போனது!மூதாட்டியின் புகழும் பரவியது.

வேலைக்குப் போகும் வீட்டினரின் தேவைகளை மட்டுமல்ல, அவர்களின் தேவைக்கு அதிகமாக உள்ளவற்றையும் சரியான இடங்களுக்குக் கொண்டு சேர்ப்பதையும் அவர் கச்சிதமாகச் செய்து வந்தார்!

அன்று மீனாட்சியம்மா வீட்டில் புது மிக்சி வாங்க, ஓடிக் கொண்டிருந்த பழைய மிக்சியை என்ன செய்வது என்று அவர் யோசித்த நேரத்தில், ”கடைசி வீட்டுக் காமாட்சி மிக்சி இல்லாம, புள்ளைங்கள வெச்சிக்கிட்டு கஷ்டப்படறா. உன்னோட பழைய மிக்சியை ஒரு வெலையைச் சொல்லிக் கொடு. ஒனக்கும் துட்டு வரும். அவளுக்கும் கொஞ்சம் வேலைப்பளு குறையும்!” என்று கூற, அவர் கூற்றிலுள்ள நியாயத்தை உணர்ந்த மீனாட்சி, அவ்வாறே செய்ய இரண்டு இல்லத்தரசிகளுக்கும் மன நிறைவு ஏற்பட்டது, இது ஒரு சிறு உதாரணந்தான்! இது போலப் பல குடும்பங்களுக்கு அவர் உதவி இருக்கிறார்!

Representational Image

இந்த வீட்டில் நடப்பதை அங்கு சொல்வது, அங்கு நடப்பதை இங்கு சொல்வது கதையெல்லாம் எப்பொழுதுமே அவரிடம் இருந்ததில்லை! பழம் பொருட்கள் வீணாகாமல் பயன்பட அவர் எப்பொழுதும் பாலமாகச் செயல்பட்டு, வாங்குவோர், விற்போர் ஆகிய இரு தரப்பினரையும் திருப்திப்படுத்தியிருக்கிறார்.

அந்த வீட்டுக்கார அம்மாவின் பயன்படாமல் இருந்த க்ரைண்டரை ஒருவருக்கு விலைபேசி விற்றுக் கொடுக்க, அந்த அம்மாவோ மகிழ்ச்சியில் நூறு ரூபாய்த் தாளை மாரியம்மா கையில் திணிக்க, ”அட என்னடா இது! காசுக்காகவா நான் இதையெல்லாம் செய்யறேன்? நீ வெச்சுக்கம்மா. எனக்குக் காசெல்லாம் வேண்டாம்!” என்று மறுத்து விட, அந்த அம்மாவுக்கோ பயங்கர ஆச்சரியம். அத்தோடு மாரியம்மா தனக்குப் பாடம் புகட்டி விட்டதாகவே எண்ணி வெட்கப்பட்டார்!’ எவ்வளவோ இருந்தும் காசுக்கு ஆசைப்படும் தான் எங்கே!எதுவுமே இல்லாதிருந்தும் காசைத் துச்சமாக மதிக்கும் மாரியம்மா எங்கே?’என்ற எண்ண ஓட்டம் அவரைக் குற்றவாளியாக்கியது!

புதிதாகக் குடி வந்த இன்கம்டாக்ஸ்காரரின் வீட்டிற்கு வேலைக்குப் போனபோது அந்த அம்மா,”இன்ஸ்பெக்டர் வீட்லயும் நீதானம்மா வேலை செய்யறே?அந்த அம்மா எப்படி?”என்று வம்புக்கு அச்சாரமிட,”அந்த அம்மாவும் ஒன்னை மாதிரிப் பொம்பளைதாம்மா! என்னோட கை, காலுக்கு வேலை கொடும்மா. வாய்க்கு வேலை கொடுக்காதே. அது எனக்குப் பிடிக்காது!” என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்ல, அன்றைக்கு வாயை மூடிக் கொண்டவர்தான். அப்புறம் மாரியம்மாவிடம் எப்பொழுதுமே கப்சிப்! இன்கம்டாக்ஸ்காரர் அலுவலகப் பணி காரணமாக வெளியே சென்றிருந்தபோது,கைக் குழந்தை திடீரென்று நோய்வாய்ப்பட, அந்த அம்மா திகைக்க,மாரியம்மா ஆட்டோ பிடித்து வந்து,மருத்துவமனை அழைத்துச் சென்று குழந்தைக்கு சிகிச்சை அளிக்க உதவியதுடன், கூடவே இரண்டு நாட்கள் இருந்து பார்த்துக் கொண்டார். அந்தம்மாவுக்கோ அளவில்லா ஆனந்தம்.தனது தாய், கூட இருந்திருந்தால்கூட, இவ்வாறு கவனித்திருக்க முடியாது என்றெண்ணி,மாரியம்மாவிடம் பாசத்தைப் பொழிய ஆரம்பித்தார். ”அட நீ என்னம்மா! யாரா இருந்தாலும் நா இப்படித்தாம்மா செஞ்சிருப்பேன். நீ உருகுற அளவுக்கு நா எதுவுஞ் செஞ்சிடல..விடு!” என்று சாதாரணமாகச் சொன்ன மாரியம்மாவை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார்!

மாரியம்மாவின் கணவர் இந்திய ராணுவத்தில் சிப்பாயாகப் பணியாற்றி இறந்தவர் என்பதும், அவரின் பென்ஷன் தொகைதான் மாரியம்மாவுக்குக் கை கொடுக்கிறது என்பதும் மிகச் சிலருக்கே தெரியும்.அவருக்குப் பழக்கமான வீடுகளில் கல்யாணம்,காது குத்தல்,பெயர் சூட்டு விழா,என்று எந்த விழாவுக்கு யார் கூப்பிட்டாலும்,மாரியம்மாவின் பரிசு ஒரு எவர்சில்வர் தூக்காகவே இருக்கும்.என்னவோ அதில் அவருக்கு விருப்பம்.எல்லார் வீட்டிலும் அதன் பயன்பாடு அதிகம் என்பதாலோ என்னவோ அதனைப் பரிசுப் பொருளாக அவர் தேர்ந்தெடுத்திருந்தார்.

இப்படி வழிகாட்டியாக வாழ்ந்த மாரியம்மாவை கொரோனா துரத்தியது. முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உதவப் போய், அவரையும் அது தாக்க,எப்படியோ மீண்டு வந்து விட்டார். ஆனால் அவர் தங்கியிருந்த வீட்டுக்காரரைக் கொரோனா தாக்கியபோது அவரால் ஒதுங்கியிருக்க முடியவில்லை. உதவப் போனார். அவரை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டது. இரண்டே நாட்களில் அவர் உயிர் பிரிய,அக்கம் பக்கத்தில் இருந்தவர்களெல்லாம் அவர் பரிசாக அளித்த தூக்கில் நீர் கொண்டு வந்து அவரைக் குளிப்பாட்ட,அதுவே ஒரு அரிய சடங்காகிப் போனது.

வீட்டில் வேலை செய்வோர் மூலமாகவே வீட்டு ரகசியங்கள் கசியும் இக்காலத்தில், அதற்கு எதிர்மாறாக வாழ்ந்து,குடும்பங்களை இணைக்கும் பாலமாக வாழ்ந்த மாரியம்மாவின் இறப்பு, அப்பகுதியினருக்குப் பெரும் இழப்பே என்பதில் சந்தேகமே இல்லை. கணவரின் உடலில் ஓடிய ராணுவ ரத்தம் அவர் உடலிலும் ஓடியதோ. சேவை,சேவை என்று சிறகடித்துப் பறந்ததோ,

பேசித் திரிந்த பெண் குயிலொன்று கொரோனா அம்பால் வீழ்ந்து விட்டதே!

பல குடும்பங்களுக்குப் பாலமாக வாழ்ந்த அவர் விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலமாகிப் போனாரோ?

-ரெ.ஆத்மநாதன்,

கூடுவாஞ்சேரி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.