தெலங்கானா மாநில பா.ஜ.க தலைவரும், எம்.பி-யுமான பாண்டி சஞ்சய், பா.ஜ.க மீதான தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர்-ன் கருத்து குறித்து, “கே.சி.ஆர்-ன் அரசியல் நாள்கள் எண்ணப்பட்டு வருகின்றன!” எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.
நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாண்டி சஞ்சய், “பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பது முதல்வர் கே.சி.ஆர்-க்கு எப்படித் தெரியும்? பா.ஜ.க-விடம் எந்த வியூகமும் இல்லை என்று கூறும் முதல்வர் நீங்கள். அப்படி பா.ஜ.க-விடம் எந்த வியூகமும் இல்லையென்றால், 18 மாநிலங்களில் எப்படி ஆட்சியில் இருக்க முடியும். கே.சி.ஆர்-ன் இதுபோன்ற கருத்துகள் மிகவும் வெட்கக்கேடாக இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கே.சி.ஆர்-ன் அரசியல் நாள்கள் எண்ணப்பட்டு வருகின்றன.
நீங்கள் நாட்டின் தலைவரா? பிரதமர் மோடி ஒரு நாளைக்கு 18 மணிநேரம் உழைக்கிறார். ஆனால், நீங்கள் உங்கள் பண்ணை வீட்டைவிட்டு வெளியேகூட வருவதில்லை. அனைவரும் உங்களை நாட்டின் தலைவர் என்று கூறி சிரிக்கிறார்கள்” என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய பாண்டி சஞ்சய், “எமர்ஜென்சி காலகட்டத்தை நீங்கள் புகழ்ந்து பேசுகிறீர்கள். ஆனால், அந்த காலகட்டத்தில், எமர்ஜென்சிக்கு எதிராகப் போராடியவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். மேலும் அவருடைய கட்சியில், யார் வேண்டுமானாலும் ஏக்நாத் ஷிண்டே ஆகலாம். அது முதல்வரின் மகனாகவோ, மகளாவோ அல்லது மருமகனாகவோகூட இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர், “இந்திரா காந்திக்கு நன்றி. அன்று அவர் எமர்ஜென்சியை அறிவிக்கும் அளவுக்குத் தைரியமாக இருந்தார். அது நேரடியாக, அறிவிக்கப்பட்ட ஒரு எமர்ஜென்சி. ஆனால் இன்று இந்தியாவில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி உள்ளது” எனக் கூறியிருந்தார்.
கே.சி.ஆர்-ன் இத்தகைய கருத்துக்குப் பின்னரே, பா.ஜ.க தலைவர் பாண்டி சஞ்சய் இதுபோன்று பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.