புதுடெல்லி: புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) திறந்து வைத்தார். நாடாளுமன்றக் கட்டிடப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் பிரதமர் உரையாடினார்.
இது தொடர்பாக பிரதமர் தனது ட்விட்டரில், “இன்று காலை, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை திறந்து வைக்கும் பெருமை எனக்கு கிடைத்தது.
“நாடாளுமன்றக் கட்டிடப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் உரையாடினேன். அவர்களுடைய முயற்சிகள் கண்டு நாம் பெருமை அடைகிறோம். நமது நாட்டிற்கான அவர்களின் பங்கு என்றும் நம் நினைவில் இருக்கும்.” என்று கூறியிருக்கிறார்.
This morning, I had the honour of unveiling the National Emblem cast on the roof of the new Parliament. pic.twitter.com/T49dOLRRg1
— Narendra Modi (@narendramodi) July 11, 2022
நாடாளுமன்ற கட்டிடத்தின் தேசிய சின்னம் வெண்கலத்தால் ஆனது. 6.5 மீ உயரம் உள்ள இந்த சின்னத்தின் எடை சுமார் 9500 கிலோ ஆகும். இது புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மத்திய முகப்பின் உச்சியில் வடிக்கப்பட்டுள்ளது. இந்த வெண்கலச் சின்னத்தை தாங்கும் வகையில் சுமார் 6500 கிலோ எடையுள்ள எஃகு தூண்கள் நான்கு புறங்களிலும் கட்டப்பட்டுள்ளன.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் கூரையில் தேசிய சின்னத்தை வார்ப்பதற்கான கருத்துரு மற்றும் செயல்முறையானது களிமண் மாடலிங் (மாதிரி) / கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் (கணினி வரைகலை) முதல் வெண்கல வார்ப்பு மற்றும் மெருகூட்டல் வரை எட்டு வெவ்வேறு நிலைகளில் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.