டெல்லியில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடம் அமைந்துள்ளது. இந்த சூழலில் பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் டெல்லியில் புதிய நாடாளுமன்றம் எழுப்பப்பட உள்ளது. 4 மாடிகளைக் கொண்ட இந்த கட்டடம் ரூ.970 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ளது.
இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பா் 10ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். புதிய நாடாளுமன்றத்தை எதிர்த்த வழக்குகள் மீது தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், புதிய நாடாளுமன்ற கட்டடம் உள்ளிட்டவற்றை அடக்கிய சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு அனுமதி அளித்தது. இதையடுத்து, புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
முக்கோண வடிவில் அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்துக்கான கட்டுமான ஒப்பந்தம் டாடா நிறுவனத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு முன்னர் இந்த கட்டடத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டுமானத்தை மேற்கொள்ள 14 உறுப்பினா்களைக் கொண்ட பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் நீளமுள்ள வெண்கல தேசிய சின்னத்தை பிரதமர் மோடி இன்று காலை திறந்து வைத்தார். இதற்காக நடைபெற்ற பூஜைகளிலும் முன்னதாக பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.