பொன்னியின் செல்வன் – பான்-இந்தியா படமல்ல, பான்-உலகப் படம்
லைக்கா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க, மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், கிஷோர், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை இரண்டு பாகங்களாகத் திரைப்படமாக உருவாக்கி முதல் பாகத்தை செப்டம்பர் 30ம் தேதி தியேட்டர்களில் ஐந்து மொழிகளில் வெளியிட உள்ளார்கள். இப்படத்தின் டீசர் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழில் சினிமா உருவான நூறாண்டுகளுக்கு முன்பே சரித்திரக் கதைகள் மட்டுமே ஆரம்பத்தில் தயாராகி வந்தன. அதற்குப் பிறகுதான் சமூகக் கதைகளையும் எடுக்க ஆரம்பித்தார்கள். இருந்தாலும் அவ்வப்போது சரித்திரக் கதைகள் பலவும் வெளிவந்து வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால், தமிழில் முழுமையான ஒரு சரித்திரப் படம் வந்து பல வருடங்களாகிவிட்டது. 2006ம் ஆண்டில் வடிவேலு நடித்த 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' நகைச்சுவை சரித்திரப் படமாக அமைந்து வெற்றியும் பெற்றது. 2011ல் வெளிவந்த சூர்யா நடித்த 'ஏழாம் அறிவு' படத்தில் 'போதி தர்மர்' சம்பந்தப்பட்ட காட்சிகள் சரித்திர காலத்து நிகழ்வாக படமாக்கப்பட்டிருந்தன. பத்து வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பதாக இருந்த 'ராணா' சரித்திரப் படம் பூஜை போடப்பட்டு ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கைவிடப்பட்டது. அடுத்து விக்ரம் நடிக்க 'கரிகாலன்' என்ற சரித்திரப் படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்று பின்னர் படம் கைவிடப்பட்டது.
மேலே, குறிப்பிட்ட இந்த இரண்டு படங்களும் உருவாகி வெளியாகி இருந்தால் 'பாகுபலி' படத்திற்கு முன்பே தென்னிந்தியாவில் தமிழில் தரமான சரித்திரப் படங்கள் வெளியாகி இருக்கும். இந்தப் படங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, கைவிடப்பட்ட செய்தி அறிந்த பின் ராஜமவுலி யோசித்து 'பாகுபலி' படத்தை உருவாக்க முனைந்திருக்கலாம் என்பதையும் மறுக்க முடியாது. 'பாகுபலி' படத்தைப் பார்த்த பிறகுதான் 'பொன்னியின் செல்வன்' படம் உருவாக்கும் எண்ணம் வந்திருக்கும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. 'பாகுபலி' படத்திற்கு முன்பு தெலுங்கில் உருவான பல சரித்திரப் படங்கள் சென்னையில், தமிழ்க் கலைஞர்களின் ஒத்துழைப்பில் தயாரான படங்கள்தான். இன்னும் ஏன், 'பாகுபலி' படத்தின் பல காட்சிகள் முன்பு வெளிவந்த தமிழ் சரித்திரப் படங்களின் கதை, காட்சியமைப்புகள் ஆகியவற்றுடன் ஒத்திருக்கும். கல்கி, சாண்டில்யன் எழுதிய சரித்திர நாவல்களின் சில பல அத்தியாயங்களைத் தழுவியதாகவும் இருக்கும்.
ஆனால், 'பொன்னியின் செல்வன்' படம் எந்த முந்தைய திரைப்படங்களையும், நாவல்களையும் காப்பியடித்து உருவாக்காமல் முழுவதுமாக கல்கி எழுதிய நாவலை மட்டுமே அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. பல லட்சம் பேர் நடித்த ஒரு நாவலை திரைப்படமாக உருவாக்குவதில் மிகப் பெரும் சவால் உண்டு. பொதுவாக ஒரு நாவலைப் படிக்கும் போது நாவலில் இடம் பெறும் வர்ணனைகள், கதாபாத்திரங்கள், இடங்கள் ஆகியவற்றைப் பற்றி படிப்பவர்களின் மனதில் ஒரு கற்பனை உருவம் உருவாகும். அதற்குத் தகுந்தபடி திரைப்படங்களில் அவர்களைத் திருப்திப்படுத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. எழுத்தில் படித்த ஒவ்வொன்றும் அப்படியே திரையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
'பொன்னியின் செல்வன்' இயக்குனர் மணிரத்னம் கல்லூரியில் படித்த காலத்தில் நாவலைப் படித்து அதன் தீவிர ரசிகரானவர். தமிழ் சினிமாவில், ஏன் இந்திய சினிமாவில் 90களில் பல திருப்புமுனைகளை, சில பல புதிய தொழில்நுட்பங்களை, காட்சியமைப்புகளை ஏற்படுத்தித் தந்தவர் மணிரத்னம். அவரது தாக்கம் இல்லாமல் இன்றைய இளம் இயக்குனர்கள் படம் எடுக்க வாய்ப்பில்லை. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரசிகர்களின் மனதை வென்றவர். இதற்கு முன்பே சில மல்டி ஸ்டார் படங்களைக் கொடுத்து பாராட்டுக்களைப் பெற்றவர். அவரது எண்ணத்தில், கற்பனையில் திரைப்படமாக உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' நிச்சயம் இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதுமே வரவேற்பைப் பெறும் என அவரது தீவிர ரசிகரகள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் டீசர் வெளியாகி மூன்று நாட்களாகவிட்டது. இந்த சில நாட்களிலேயே யூ டியூபில் மட்டும் தமிழில் 90 லட்சம் பார்வைகள், தெலுங்கில் 52 லட்சம், ஹிந்தியில் 41 லட்சம், மலையாளத்தில் 14 லட்சம், கன்னடத்தில் 4 லட்சம் பார்வைகள் என மொத்தமாக 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இரண்டு நாட்களில் இரண்டு கோடி பார்வைகள் யு டியூபில் மட்டுமே. மற்ற சமூக வலைத்தளங்களின் பார்வைகளையும் சேர்த்தால் இன்னும் அதிகமாக இருக்கும்.
சில தெலுங்கு ரசிகர்கள் 'பாகுபலி' படத்தையும், 'பொன்னியின் செல்வன்' படத்தையும் ஒப்பீடு செய்து வருகிறார்கள். அது வழக்கமாக அனைத்துப் படங்களுக்கும் வரும் ஒரு விமர்சனம்தான். தெலுங்கு ரசிகர்களுக்கு இந்த டீசர் பிடித்திருக்கிறது என்பதற்கு சாட்சி அதற்குக் கிடைத்த 52 லட்சம் பார்வைகள். தமிழை அடுத்து தெலுங்கில்தான் அதிகப் பார்வைகள் கிடைத்துள்ளது. தமிழில் மட்டும்தான் டீசர் அறிமுக விழா நடத்தினார்கள். தெலுங்கிற்குச் சென்று அங்கு ஒரு விழா நடத்தும் போது அதற்கான தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கும். அது மற்ற மொழிகளுக்கும் பொருந்தும்.
'பாகுபலி, பொன்னியின் செல்வன் ஒப்பீடு' பற்றி ஒன்று மட்டுமே சொல்ல வேண்டும். 'பாகுபலி' சினிமாவுக்காக எழுதப்பட்ட ஒரு கதை. 'பொன்னியின் செல்வன்' சினிமாவுக்காக எழுதப்பட்ட கதை அல்ல, அது ஒரு நாவல். பல லட்சம் பேரால் படிக்கப்பட்டு மனதில் ஆழப் பதிந்த ஒரு நாவல். அதை சினிமா மொழியில் மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. ஒப்பீடு செய்பவர்கள் இதைப் பற்றி யோசித்தால் அந்த ஒப்பீட்டையே நிறுத்திக் கொள்வார்கள். ராஜமவுலி வந்து இயக்கினாலும் விமர்சனங்களுக்கு தப்பமாட்டார்.
'பொன்னியின் செல்வன்' டீசருக்குக் கிடைத்த வரவேற்பை படக்குழுவினர் எப்படி தக்க வைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதுதான் அடுத்து எழும் கேள்வி. பல திறமை வாய்ந்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பார்த்துப் பார்த்து தேர்வு செய்து உருவாக்கியிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிரபலமானவர்கள்தான். டீசர் வெளியீடு நடந்து முடிந்துவிட்டது. அடுத்து டிரைலர் வெளியீடு, இசை வெளியீடு ஆகியவை இருக்கிறது. டீசர் வெளியீட்டில் சில நட்சத்திரங்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். ஆனால், அடுத்து நடக்கப் போகும் விழாக்களில் முடிந்த வரையில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அனைவருமே கலந்து கொள்ள வேண்டும். தமிழில் மட்டும் விழாக்களை நடத்தாமல் மற்ற மாநிலங்களிலும், ஏன் உலக அளவிலும் சென்று சேர வெளிநாடுகளிலும் விழாக்களை நடத்த வேண்டும்.
'பொன்னியின் செல்வன்' ஒரு பான்-இந்தியா படம் மட்டுமல்ல, உலக அளவிலான படமும் கூட என்பதை மணிரத்னம் நன்றாகவே உணர்ந்திருப்பார். அவரது முந்தைய படங்கள் உலக அளவில் சில பல பட விழாக்களில் கலந்து கொண்டுள்ளன. ஆஸ்கர் விருது வென்ற ஏஆர் ரகுமான் இசை, உலக அளவில் பிரபலமான முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பது இந்தப் படத்தை உலக அளவில் எளிதில் சென்று சேர்க்கும். அதற்கான முன்னெடுப்புகளை படக்குழு மிகச்சரியாகச் செய்ய வேண்டும்.
ஹாலிவுட் பட ரசிகர்கள் சரித்திரப் படங்களை விரும்பிப் பார்ப்பவர்கள். உலக அளவில் அமெரிக்கா, சீனா ஆகியவை சினிமா வியாபாரத்தில் அதிக வசூலைக் கொடுக்கக் கூடிய நாடுகள். சீனாவில் எப்போது சரித்திரப் படங்களுக்கென்று ஒரு தனி வரவேற்பு உண்டு. இந்தியா, சீனா இடையே பல நூற்றாண்டுகளாகவே சரித்திரத் தொடர்பு உண்டு. இன்னும் சொல்லப் போனால் 'பொன்னியின் செல்வன்' படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து இங்கு வெளியாகும் தினத்தில் அங்கு வெளியிட்டால் கூட நல்ல வரவேற்பு கிடைக்கும். சோழப் பேரரசின் தாக்கம், தென் கிழக்கு ஆசிய நாடுகளான மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், புரூனை, கிழக்கு திமோர் உள்ளிட்ட நாடுகளிலும் உள்ளது. அங்கு பல நாடுகளிலும் சோழர்கள் கட்டிய இந்து கோவில்கள் உண்டு. பண்டைய நாட்களில் அந்த நாடுகளில் இந்துப் பேரரசு கொடி கட்டிப்பறந்த காலம் உண்டு. அவர்களுக்கும் தங்களை முன்னர் ஆண்ட அந்த இந்துப் பேரரசர்கள் பற்றிய வரலாற்றைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். அதற்கு 'பொன்னியின் செல்வன்' படத்தை சீன மொழி மட்டுமல்லாது தென்கிழக்கு ஆசிய மொழிகளிலும் டப்பிங் செய்தால் நல்லது.
'பொன்னியின் செல்வன்' டீசர் யூ டியூபில் மட்டும் ஐந்து மொழிகளில் இரண்டு கோடி பார்வைகளைக் கடந்துள்ளது என மேலே சொல்லியிருந்தோம். டீசர் பற்றி விமர்சனம், டீசர் பற்றி ரியாக்ஷன் என டீசர் வெளியான பின் பல வீடியோக்கள்ள வந்துவிட்டன. அவற்றின் பார்வைகள் டீசருக்குக் கிடைத்த பார்வைகளை விட அதிகமிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவற்றில் பல டீசர்களில் சொல்லப்பட்ட கருத்துக்களில் பொதுவாக இருப்பது, இந்த 'பொன்னியின் செல்வன்' தமிழ்த் திரைப்படம் ஹாலிவுட் படம் பார்க்கும் ஒரு அனுபவத்தைக் கொடுக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஹாலிவுட்டில் பிரம்மாண்டமாகத் தயாராகி மிரட்டிய 'லார்ட் ஆப் த ரிங்ஸ், கேம் ஆப் தோர்ன்ஸ்' உள்ளிட்ட படங்களைப் பார்ப்பது போல டீசர் இருக்கிறது என்று விமர்சித்திருக்கிறார்கள். ஹாலிவுட் பட ரசிகர்களுக்கு ''Who done it ?” என்ற ஒரே ஒரு கேள்வி போதும். அதைச் சார்ந்த கதை, திரைக்கதை உள்ள படங்களை அவர்கள் வெகுவாக ரசிப்பார்கள். அப்படி ஒரு ''Who done it ?” இந்த 'பொன்னியின் செல்வன்' நாவலிலும் உண்டு. அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்ற ஒரு த்ரில்லிங் அனுபவம் நாவலில் உண்டு.
'ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?' என்பதுதான் 'பொன்னியின் செல்வன்' நாவலின் கிளைமாக்ஸ். அந்த கிளைமாக்சை நோக்கி ஆரம்பத்தில் இருந்து நகரும் கதைப் பயணம் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு கிளைமாக்சைப் போல இருக்கும். இரண்டாம் பாகத்தில் இப்படம் முடிந்தாலும் மூன்றாம் பாகம் உருவாக்கும் அளவிற்கு சோழப் பேரரசன் 'பொன்னியின் செல்வன்,' என்கிற 'அருள்மொழி வர்மன்' என்கிற 'ராஜராஜசோழன்' வரலாற்றையும் படைக்கும் ஆர்வத்தைத் தூண்டும்.