மதுரையில் ப்ரீ பயர் விளையாடிய பள்ளி மாணவிக்கு காதல் வலை விரித்து மயக்கி மகராஷ்டிர மாநிலத்துக்கு கடத்திச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை பசுமலை பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் ப்ரீ பயர் செல்போன் விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
மாணவியுடன் மகராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட்டில் வசித்து வரும் தமிழக இளைஞரான செல்வா என்பவரும் ப்ரீ பயர் விளையாடி உள்ளார்.
அப்போது சாட்டிங் செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு செல்போன் நம்பரை பகிர்ந்து கொண்ட நிலையில் அந்த மாணவியை காதல் வலையில் வீழ்த்திய செல்வா, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராய்காட்டில் இருந்து மதுரை வந்து அந்த மாணவியை ஏமாற்றி மகாராஷ்டிர மாநிலத்துக்கு அழைத்துச்சென்று தனியாக வீடு எடுத்து வைத்து மாணவியுடன் குடித்தனம் நடத்தி வந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் மாணவி மாயமான வழக்கை விசாரித்த போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் அவர் தங்கி இருந்த வீட்டில் இருந்து அந்த மாணவியை பத்திரமாக மீட்டனர்.
அங்கிருந்து தலைமறைவான செல்வாவை தேடி வந்த நிலையில் மாணவியை கடத்திச்சென்று வீட்டில் அடைத்த சம்பவத்தை விசாரித்து வந்த காவல் ஆய்வாளர் சுந்தரி தலைமையிலான தனிப்படை போலீசார் ராய்காட் சென்று செல்வாவை கைது செய்து அழைத்து வந்தனர்
காவல் துறையினரின் விசாரணையில், கடலூர் மாவட்டம் T.புடையூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் புதிய ரயில்வே காலனி பகுதியில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில் அவரது மகன் செல்வா, தன்னை தமிழன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அந்த மாணவியை நம்ப வைத்து கடத்திச்சென்று அந்த சிறுமியின் வாழ்க்கையை சீரழித்தது தெரியவந்ததால் ப்ரீ பயர் காதலன் செல்வாவை போக்சோ வழக்கில் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.
அதே நேரத்தில் ப்ரீ பயர் காதலனை நம்பிச் சென்ற பெண் வாழக்கையை பறி கொடுத்து தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.