மகாராஷ்டிராவில் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு உள்ளிட்ட வழக்குகளின் விசாரணையை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே அக்கட்சியின் தலைமைக்கு எதிராக திடீரென போர்க்கொடி எழுப்பியிருந்த நிலையில் தனக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரியும் ஏக்நாத் ஷிண்டே அவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவிறகு எதிராகவும் சிவசேனா கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட கொறடாவை ஆளுநர் அங்கீகரித்ததற்கு எதிராகவும், இவ்வாறு ஏராளமான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா கட்சியின் சார்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்களை ஏற்கனவே உச்சநீதிமன்றம் விடுமுறைக்கால சிறப்பு அமர்வு விசாரித்தபோது விடுமுறை முடிந்த பிறகு ஜூலை 11-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் இந்த வழக்குகளை விசாரிப்பதற்கான உரிய அமர்வை ஏற்படுத்த சிறிது காலம் தேவைப்படுவதாகவும் எனவே வழக்கின் விசாரணையை தள்ளி வைப்பதாகவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். இடைப்பட்ட காலத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருக்குமாறு மகாராஷ்டிரா சபாநாயகரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
சிவசேனாவின் இருதரப்பு எம்.எல்.ஏ.க்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் விசாரணை நடத்தி முடிக்கும் வரை எடுக்க வேண்டாம் எனவும் தலைமை நீதிபதி கேட்டுக் கொண்டார்.
இதையும் படிக்க: ஷின்சோ அபே கொலையும், அக்னிபாத் திட்டமும் – எச்சரிக்கை விடுக்கும் திரிணமூல் காங்கிரஸ்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM