மும்பை: மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர்.
வட மாநிலங்களில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கடந்த சில வாரங்களாக மகாராஷ்டிராவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வர்தா, கட்சிகோலி, சிந்துதுர்க், ராய்கட், சதாரா உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பாதிப்பு அதிகமாக உள்ளது.
இது குறித்து மகாராஷ்டிர பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. கனமழையால் பாதிக்கப்பட்டோருக்காக மாநிலம் முழுவதும் 35 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய 4,917 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மழை பாதிப்பு காரணமாக இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர். 125 கால்நடைகள் இறந்துள்ளன. 838 வீடுகள் சேதமடைந்துள்ளன. தலைநகர் மும்பை உள்பட மாநிலம் முழுவதும் மீட்பு, நிவாரண பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 13-ம் தேதி வரை மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே வெள்ள அபாய பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.