மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் – மதன் #AppExclusive

ரு நாட்டின் எல்லைகளை விஸ்தரிப்பதற்காக வாளேந்திய மன்னர்கள் வரலாறு நெடுக பலருண்டு!

உலகெங்கும் நாடுகளின் எல்லைகளை நிர்ணயித்தது யுத்தங்கள்தான் என்பது கசப்பானதொரு உண்மை. அலெக்ஸாந்தர், ஜூலியஸ் சீசர், நெப்போலியன் போன்றவர்கள் போர்க்களத்தில் குதித்ததால் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்! இருப்பினும் வரலாறு மேற்கண்ட மன்னர்களையும் அவர்கள் ஈடுபட்ட போர்களையும் ஏற்றுக் கொள்கிறது! அவர்கள் மாவீரர்கள் என்று போற்றப்பட்டார்கள்!

ஆம், யுத்தத்தை கடவுள்கள்கூட ஏற்றுக் கொண்டார்கள்! இருப்பினும் இரண்டாம் உலகப் போர் துவங்கி நிகழ்ந்து முடிவதற்குள் யூதர்கள் மீது ஹிட்லர் கட்டவிழ்த்த இன்னொரு பிரத்யேகமான யுத்தத்தை மனித சமுதாயம் இன்றளவும் அருவருப்போடும் வேதனையோடும் பார்க்கிறது. 

ஹிட்லர் தலைமையில் நாஜி அரசு அறுபது லட்சத்துக்கும் மேற்பட்ட, நிராயுதபாணிகளான யூதர்களை தீர்த்துக் கட்டியது உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகக் கொடுரமான சம்பவம். 

Madan Talks about Adolf Hitler

‘யூத இனம் அடியோடு அழிக்கப்பட வேண்டும். யூதராகப் பிறந்த ஒருவரைக்கூட உயிரோடு விட்டு வைக்கக்கூடாது!” – இதையே தன் முக்கியமான முதற்பெரும் கொள்கையாக ஹிட்லர் அறிவித்தார். அதை ஆணையாக ஏற்று அரசுயந்திரம் முழுமூச்சோடு, அசுர பலத்துடன் செயல்படத் துவங்கியது நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை! யூதர்கள் மீது யூதக் குவியல் ஹிட்லருக்கு அப்படி என்ன வெறுப்பு? தன் பாட்டியை நிராதரவாக விட்டு ஓடிப்போனவர் ஒரு யூதர் என்கிற ஆத்திரம் ஹிட்லருக்கு இருந்தது என்றும், தாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டபோது தவறான மருந்துகளைத் தந்து அம்மாவின் விரைவான மரணத்துக்கு காரணமானவர் ஒரு யூத டாக்டர் என்றும் பலவிதமான காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையான, தனிப்பட்ட காரணம் எதுவும் ஹிட்லருக்கு இருந்ததாகத் தெரியவில்லை.

எந்தவொரு அரசியல் தலைவருக்கும் உணர்ச்சிகரமான கொள்கையொன்று பிடிமானத்துக்காக தேவைப்படுகிறது! மக்களை ஒருங்கிணைக்கவும், உசுப்பிவிடவும், (மூட) நம்பிக்கையோடு தன்னை ஆவேசமாக பின்தொடரச் செய்யவும் பல தலைவர்கள் உணர்ச்சிப்பூர்வமான (பல சமயங்களில் அபத்தமான) கொள்கைகளை முன்வைக்கிறார்கள்! முதல் உலகப் போர் முடிந்து ஜெர்மனி அதில் தோற்றுப் போன அவலத்துக்கும் அவமானத்துக்கும் ‘காரணம்’ தேட வேண்டிய நிலை! கம்பீர சாம்ராஜ்யமாக திகழ்ந்த ஜெர்மனி வீழ்ந்ததற்கு யாரையாவது குற்றம் சாட்டியாக வேண்டும்! அதற்காக பலியாடுகள் தேவைப்பட்டன. ஹிட்லர், யூதர்களைத் தேர்ந்தெடுத்தார்! இது வியப்பான விஷயமல்ல! உலகெங்கும் பார்த்தால் இப்படி ஏதாவது ஒரு இனத்தை அல்லது மதத்தைக் குறிவைத்துத் தாக்கி, அதில் குளிர் காயும் சுயநலத்தலைவர்கள் ஏராளமாக உண்டு என்பதைப் புரிந்து கொள்ள முடியும்!

Madan Talks about Adolf Hitler

‘ஆகஸ்ட் 1941 முதுல் டிசம்பம் 1943 வரை இருபத்தைந்து லட்சம் யூதர்களை நாங்கள் செய்தோம்’‘யூதர்கள் தேசத்துரோகிகள்! பாதுகாப்பான வேலைகளை மட்டும் எடுத்துக்கொண்டு தங்கள் வசதிகளை கில்லாடித்தனமாக பெருக்கிக்  கொண்டார்கள். ஜெர்மனியின் கெளரவம் அவர்களுக்கு பொருட்டல்ல, லட்சக்கணக்கான ஜெர்மனிய இளம் வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து யுத்தத்தில் குதித்தபோது யூதர்கள் சொகுசாக வாழ்ந்து நாட்டின் பொருளாதாரத்தைக் குலைத்தார்கள். வைரஸ் போன்று வளர்ந்துவிட்ட யூதர்கள் அடியோடு அழிக்கப்பட்டால்தான் புதுப்பிறவி எடுக்கும்! மறுமலர்ச்சி பிறக்கும்!’ என்று விபரீதமான பிரசாரத்தில் இறங்கினார் ஹிட்லர். ஆரம்பத்தில் அரசியல் காரணங்களுக்காக யூதர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய ஹிட்லர் போகப்போக நிஜமாகவே யூதர்களை அடியோடு வெறுக்க ஆரம்பித்தார் என்று கூடச் சொல்லலாம்! ஹிட்லரின் குரலும், அந்தக் குரலில் இருந்த வசீகரமும் ஆவேசமும் ஜெர்மன் மக்களை வசியம் செய்தது உண்மை. விளைவாக, யூதர்கள் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். நாடெங்கும், யூதர்கள் தங்கள் சட்டையில் மஞ்சள் நிற நட்சத்திர சின்னத்தை அணிய வேண்டும் என்று ஆணையிட்டார் ஹிட்லர். அந்தச் சின்னத் தோடு தெருவில் எதிர்ப்பட்ட யூதர்கள் மீது கல்லெறியப்பட்டன. மருத்துவ சிகிச்சை தர மறுத்தனர். ஜெர்மனியில் ஒரு தெருவில் செயற்கைக் கால் பொருத்திக் கொண்ட வயதான ஒரு யூதர் நடைபாதையில் தடுக்கி விழுந்தார். அவருடைய செயற்கைக் கால் தூரப்போய் விழுந்துவிட்டது. மூன்று மணி நேரம் கடுங்குளிரில் நடைபாதையிலேயே பரிதாபமாகக் கிடந்தார் அந்த முதியவர். யாருமே உதவிக்கு வரவில்லை! 

Madan Talks about Adolf Hitler

யூதக் குவியல் யூதர்கள் மீது பிரசாரத்துக்காக நாஜி கட்சி திரைப்படங்கள் தயாரித்தது. அதில் யூதர்களையும், பெருச்சாளிகளையும் மாற்றி மாற்றி காட்டி ‘இவர்களுக்குள் வித்தியாசமில்லை’ என்று ‘சப் டைட்டில்’ போட்டார்கள்! பிறகு நேரடியான தாக்குதல்கள் துவங்கின. வீடு வீடாகப் புகுந்து நாஜிப் படை வீரர்கள் யூதர்களை ஏதாவது குற்றம் சாட்டி கைது செய்தார்கள். முதியவர்களின் தாடிகளில் தீ வைத்து அடித்துத் துரத்தினார்கள். 1941-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வியன்னா அருகில் உள்ள ஊரில் நாஜிப் படை புகுந்தது. எழுநூறு யூதர்கள் கைது செய்யப்பட்டு அங்கேயிருந்த அவர்களுடைய வழிபாட்டு ஆலயத்துக்குள் அடைக்கப்பட்டார்கள். நாஜி வீரர்கள் சிரித்தவாறு சுற்றி நின்று அந்த அப்பாவிகள் மீது கூட்டமாக சிறுநீர் கழித்தார்கள். பிறகு பெட்ரோல் டின்களை வீசி, அத்தனை பேரையும் உயிரோடு மொத்தமாக எரித்தார்கள். யூதர்களை தீர்த்துக்கட்ட நாடெங்கும் ‘விசேஷ’ சிறைச் சாலைகள் அமைக்கப்பட்டன. வேகமாக, கொத்துக் கொத்தாக அவர்களைக் கொல்லத் திட்டங்கள் போடுவதற்காக தனி இலாகா அமைக்கப்பட்டது! ஹிட்லரின் வலது கரங்களான அடால்ஃப் ஐக்மேன், ஹென்ரிக் ஹிம்லர் போன்றவர்கள் தலைவனின் பாராட்டுதல்களை வாங்குவதற்காக விநோதமான, விபரீதமான கொலைத் திட்டங்களை உருவாக்கினார்கள். ஜெர்மனி கைப்பற்றிய போலந்து நாட்டில் உள்ள ஆவ்ஸ்விட்ச் என்கிற கொலைச் சிறைச்சாலையை இன்றைக்கும் காட்சிப் பொருளாக வைத்திருக்கிறார்கள் அங்கே தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய ருடால்ஃப் ஹெஸ் ‘ஆகஸ்ட் 1941 முதல் டிசம்பர் 1943 வரை இருபத்தைந்து லட்சம் யூதர்களை நாங்கள் கொலை செய்தோம்’ என்று போருக்குப் பிற்பாடு நடைபெற்ற நியூரம்பர்க் வழக்கில் ஒப்புக் கொண்டார். மொத்தம் பதினாறு பிரும்மாண்டமான சிறைச்சாலைகளில் ‘குளிக்கும் அறைகள்’ ஏற்படுத்தப்பட்டன. மிகப்பெரிய அந்த அறையில் ஒரே சமயத்தில் 2,000 பேர் குளிக்கலாம். அப்படித்தான் சொல்லி யூதர்களை, குடும்பம் குடும்பமாக பிறந்த மேனியோடு உள்ளே தள்ளினார்கள். அறையை வெளியிலிருந்து மூடி ‘லாக்’ செய்த பிறகு ‘ஷவர்’கள் திறந்துவிடப்பட்டன. ஷவர்களில் வந்தது தண்ணீர் அல்ல. உடனே கொல்லும் பயங்கர விஷவாயு. 

(20.10.2004 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழிலிருந்து…)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.