வாழ்க்கையின் பயணங்களில் நாம் விட்டுச்செல்லும் தடயங்கள் மிகவும் முக்கியமானவை. இத்தடயங்களே நம்முடைய சாதனைகளை உரக்கச் சொல்லும். அவ்வாறு வரலாற்றில் தற்போது தன்னுடைய தடத்தை பதித்துள்ளார், இந்தியாவை சேர்ந்த கீதா கோபிநாத்.
இந்தியாவில் பிறந்த கீதா கோபிநாத் வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியம் (IMF – International Monetary Fund)-ன் முன்னாள் தலைமை பொருளாதார வல்லுநர்களின் பட்டியல் சுவரில் இடம்பெற்ற முதல் பெண் மற்றும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு 2003-ம் ஆண்டிலிருந்து 2006-ம் ஆண்டு வரை, இந்தியரான ரகுராம் ராஜன் தலைமை பொருளாதார நிபுணர் மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக இருந்தார். இவரே ஐ.எம்.எஃப் சுவரில் இடம்பெற்ற முதல் இந்தியர். அக்டோபர் 2018-ல் கீதா கோபிநாத் தலைமை பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் துணை நிர்வாக இயக்குநராகவும் பதவி வகித்தார்.
இந்நிலையில் இவரின் புகைப்படம் ஐ.எம்.எஃப் சுவரில் இடம்பிடித்துள்ளது. அதை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள கீதா கோபிநாத், “வழக்கமான போக்கை உடைத்து தலைமை பொருளாதார நிபுணர்களின் சுவரில் சேர்ந்தேன்” என பதிவிட்டுள்ளார்.
ஐ.எம்.எஃப்-ல் சேர்வதற்கு முன்பு, பொருளாதாரத்தில் துணை பேராசிரியராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்த கீதா கோபிநாத்தின் ஆராய்ச்சிகள் பலவும் சிறந்த பொருளாதார இதழ்கள் பலவற்றில் வெளியாகி உள்ளது குறிபிடத்தக்கது.