ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம், இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.
இந்த ஆண்டு புனித யாத்திரை கடந்த ஜூன் 30-ம் தேதி தொடங்கியது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பனிலிங்கத்தை வழிபட்டுள்ளனர். எதிர்பாராதவிதமாக கடந்த 7-ம் தேதி அமர்நாத் கோயில் பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு பலத்த மழை பெய்தது.
இதில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு கூடாரங்களில் தங்கி யிருந்த பக்தர்கள் இழுத்து செல்லப்பட்டனர். இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேரை காணவில்லை. புனித யாத்திரை மேற்கொண்டிருந்த 15,000 பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 28 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தேசிய பேரிடர் மீட்புப் படை, திபெத் எல்லை போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் இணைந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு மோசமான வானிலை நீடிப்பதால் அமர்நாத் புனித யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இரு அடிவார முகாம்களில் இருந்தும் பக்தர்கள் குழு புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.