கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை தாம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று மாலை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
போராட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலருக்கு பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதேபோன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு மேற்கொள்ளப்பட்ட தீ வைப்பு சம்பவத்தையும் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.
இதேவேளை,அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதி தனது இராஜினாமா தீர்மானம் குறித்து சபாநாயகருக்கு ஜனாதிபதியினால் கையொப்பமிட்ட கடிதத்தை அனுப்ப வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதன் போது தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது பதவிகளில் இருந்து வெளியேறுவது தொடர்பில் சட்ட நடைமுறை குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் விளக்கமளிக்கையில் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும்போது பிரதமர் பதில் ஜனாதிபதியாக பதவியேற்க அரசியலமைப்பு அனுமதியளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமரால் ஜனாதிபதியாக செயற்பட முடியாத பட்சத்தில் ஒரு மாத காலத்திற்கு சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவதற்கு அரசியல் யாப்பில் இடமுண்டு .
அந்த மாதத்திற்குள் வெளியேறும் ஜனாதிபதியின் எஞ்சிய பதவிக் காலத்திற்கு ஜனாதிபியாக ஒருவரை பாராளுமன்றம் தெரிவு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதியின் சட்டத்தரணி திரு. சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர் அளிக்கப்பட்ட வாக்குகளில் 50 க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும் என திரு.சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டினார்.