ஜனாதிபதி விளாடிமிர் புடினை இனி நட்பு நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டின் ஆட்சியாளர் என்றே அழைக்க வேண்டும் என ரஷ்யாவில் விவாதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் பிரபல அரசியல் கட்சியும் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கூட்டணி கட்சியுமான லிபரல் டெமாக்ரடிக் கட்சியே குறித்த விசித்திர கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இவ்வாறாக அழைப்பதே விளாடிமிர் புடினுக்கு பொருத்தமாக இருக்கும் எனவும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவில் மொத்தமுள்ள 450 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 22 உறுப்பினர்களை கொண்ட லிபரல் டெமாக்ரடிக் கட்சி பொதுவாக விவாத கருத்துகளையே முன்வைத்து வந்துள்ளது.
மட்டுமின்றி, உக்ரைன் மீதான போருக்கு பின்னர் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளும் ரஷ்யாவுக்கு,
உள்ளூர் பொருட்களை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளதுடன் உள்ளூர் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி கோரியிருந்தது.
இந்த நிலையில், தற்போது விளாடிமிர் புடினை இனி நட்பு நாடுகள் வெறுமனே ஜனாதிபதி என அழைக்க வேண்டாம் என கோரியுள்ளது.
மேலும், ஜனாதிபதி என்ற பட்டம் 18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டதாகவும், அது ரஷ்யாவுக்கு பொருத்தமானதாக இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் முன்னாள் தலைவர் ஒருவர் 2021 டிசம்பர் 22ம் திகதி தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசுகையில், உக்ரைன் மீதான படையெடுப்பு பிப்ரவரி 22ம் திகதி முன்னெடுக்க முடிவாகியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
உண்மையில், பிப்ரவரி 23ம் திகதி இரவு ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பை முன்னெடுத்திருந்தது.
இதுவே அவரின் கடைசி உரையாகவும் இருந்தது. அதன் பின்னர் திடீரென்று மாயமானார். ஆனால், உக்ரைன் தொடர்பான ரகசியத்தை வெளியிட்டதாக கூறி, விளாடிமிர் புடின் அவரை தண்டித்திருக்கலாம் என அப்போது கூறப்பட்டது.
இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் அவர் மரணமடைந்ததுடன், அவரது இறுதி சடங்குகளுக்கு விளாடிமிர் புடின் நேரிடையாக கலந்துகொண்டார்.
ரஷ்யாவில் மிகைல் கோர்பச்சேவ் தான் முதன்முதலில் நாட்டின் ஜனாதிபதியாக அடையாளம் காணப்பட்டார்.
அதற்கு முன்பு வரையில் கட்சியின் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளனர்.
தற்போது மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியை அரசருக்கு ஒப்பாக ஆட்சியாளர் என அழைக்கப்பட வேண்டும் என லிபரல் டெமாக்ரடிக் கட்சி கோரிக்கை விடுத்திருப்பது விளாடிமிர் புடின் விமர்சகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.