கோலார் : கொரோனா தொற்று கால் பதித்த பின், ஊட்டச்சத்து நிறைந்த வெளிநாட்டு பழ வகைகளுக்கு, ‘டிமாண்ட்’ ஏற்பட்டுள்ளது. தற்போது கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், வெளிநாட்டு பழங்கள் விளைவிக்கப்படுகிறது.கர்நாடகாவில், கொரோனா தொற்று ஏற்படுத்திய தாக்கத்தால், பொது மக்கள் தற்போது ஆரோக்கியமான உணவுகளில், ஆர்வம் காண்பிக்கின்றனர்.
குறிப்பாக அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ள, வெளிநாட்டு பழங்களை வாங்குகின்றனர்.இதற்கு முன் பெங்களூரின் கடைகளில் மட்டுமே, வெளிநாட்டு பழங்களை காண முடிந்தது. இப்போது கோலார் உட்பட பல்வேறு நகரங்களின் பழக்கடைகளில், இத்தகைய பழ வகைகள் இடம் பிடித்துள்ளது.கொரோனா நேரத்தில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள் உட்பட இயற்கையாக கிடைக்கும் உணவுகளை சாப்பிடும்படி, மருத்துவ வல்லுனர்கள் அறிவுறுத்தினர். இதை பொதுமக்களும் பின்பற்றினர். அதே பழக்கத்தை இப்போதும் தொடர்கின்றனர்.
வெளிநாட்டு பழங்களை சாப்பிடுகின்றனர்.கிவி, டிராகன் ப்ரூட், புரக்கோலி, அவகாடோ, மாண்டரீன் ஆரஞ்சு, பியூஜி ஆப்பிள், லிச்சி, ஸ்ட்ராபெரி என, பல்வேறு வெளிநாட்டு பழங்கள் அமோகமாக விற்பனையாகிறது. தேவையை உணர்ந்துள்ள விவசாயிகள் பலர், வெளிநாட்டு பழங்களை பயிரிட்டு, நல்ல லாபமடைகின்றனர்.வெளிநாட்டு பழங்களை பயிரிடுவதில், விவசாயிகள் ஆர்வம் காண்பிப்பதால், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், விவசாயிகளுக்கு வழி காண்பித்து ஊக்கப்படுத்துகின்றனர். பழங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை பற்றிய தகவல்களையும் தருகின்றனர். இந்நிறுவனங்களுடன், விவசாயிகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement