இந்திய நிகழ்வுகள்
உதய்பூர் கொலை வழக்கு: 7 வது குற்றவாளி கைது
உதய்பூர் டெய்லர் கொலை வழக்கில் தொடர்புள்ள மேலும் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.பா.ஜ., செய்தி தொடர்பாளராக இருந்த நுாபுர் சர்மா, ‘டிவி’ நிகழ்ச்சி ஒன்றில் முஸ்லிம் மதம் குறித்து அவதுாறான கருத்துக்களை வெளியிட்டதாக கடந்த மாதம் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அவர் கட்சியில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். இந்நிலையில், நுாபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவாக ராஜஸ்தானின் உதய்பூர் நகரில் வசித்த டெய்லர் கன்னையா லால் என்பவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.இதையடுத்து, கடந்த 28ம் தேதி, ரியாஸ் அக்தாரி என்பவர் பட்டப்பகலில் கன்னையா லாலை கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். அதை கவுஸ் முகமது என்பவர் மொபைல் போனில் ‘வீடியோ’ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இது நாடு முழுதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. கொலை நடந்த அடுத்த சில மணி நேரத்திலேயே இருவரும் கைது செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பினர் இதுவரை ஆறு பேரை கைது செய்துள்ளனர். நேற்று முன் தினம் இரவு, பர்ஹாத் முஹமது ஷேக் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.
ரூ 10 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்
கவுஹாத்தி-வட கிழக்கு மாநிலமான அசாமில், லாரியில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அசாமின் காம்ரூப் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போரோகா என்ற இடத்தில் வந்த மினி லாரியை நிறுத்தி, போலீசார் சோதனையிட்டனர். லாரியில் இருந்த டிரைவர் உள்ளிட்ட சிலர், அதில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். லாரியில், ‘தொலை தொடர்பு சேவைக்காக’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.லாரியை போலீசார் சோதனை செய்தனர். அதில் பழைய டயர்கள், இசைக்கருவிகள் ஆகியவற்றுக்கு நடுவே, போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போதைப் பொருளின் மதிப்பு, 10 கோடி ரூபாய் என போலீசார் தெரிவித்தனர். அந்த லாரி யாருக்கு சொந்தமானது, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அசாமில் சிவன் வேடத்தில் நாடகம்; மத உணர்வை புண்படுத்தியவர் கைது
கவுஹாத்தி-அசாமில், சிவன் வேடத்தில் மத்திய அரசுக்கு எதிராக தெரு நாடகம் போட்டு, மத உணர்வை புண்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பிரின்சி போரா என்பவர் சிவன் வேடத்தில் தெரு நாடகம் நடத்தியுள்ளார். இவருடன், பார்வதி வேடத்தில் பரிஷிமிதா என்பவர் நடித்துள்ளார். காட்சிப்படி, சிவன் – பார்வதி மோட்டார் சைக்கிளில் செல்கின்றனர்; வழியில் வாகனம் நின்று விடுகிறது. அதற்கான காரணத்தை பார்வதி கேட்க, ‘பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியதால், பணமின்றி குறைந்த அளவு நிரப்பியதே வாகனம் நிற்க காரணம்’ என, சிவன் சொல்வது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நாடகம் பற்றிய ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரசியலில் மதத்தை கலந்து ஹிந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியவர்களை கைது செய்யும்படி, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார், பிரின்ச்சி போராவை கைது செய்தனர். பின், அவர் ஜாமினில் விடுவிக்கப் பட்டார்.
தமிழக நிகழ்வுகள்
சீருடையுடன் மது குடித்த எஸ்.எஸ்.ஐ., ‘சஸ்பெண்ட்’
ஸ்ரீவில்லிபுத்துார்—சீருடையுடன் மது குடித்த வத்திராயிருப்பு எஸ்.எஸ்.ஐ., கந்தசாமியை, ‘சஸ்பெண்ட்’ செய்து, விருதுநகர் எஸ்.பி., மனோகரன் உத்தரவிட்டுள்ளார்.எஸ்.எஸ்.ஐ., கந்தசாமி சில நாட்களுக்கு முன், தம்பிபட்டி அருகே ஓரிடத்தில் உட்கார்ந்து, சீருடையுடன் மது குடித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானது. இது குறித்து விசாரணை நடத்திய ஸ்ரீவில்லிபுத்துார் டி.எஸ்.பி., சபரிநாதன், எஸ்.பி.,யிடம் அறிக்கை சமர்ப்பித்தார். இந்நிலையில், கந்தசாமியை சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி., நேற்று உத்தரவிட்டார்.
வேன்- டூவீலர் மோதல் இரண்டு பேர் பலி
நாகர்கோவில்-கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே வேன் – டூவீலர் மோதிய விபத்தில் இன்ஜினியர் உட்பட இருவர் பலியாயினர்.மண்டைக்காடு குன்னங்காட்டை சேர்ந்தவர் ரமேஷ் 28. இன்ஜினியரிங் பட்டதாரி. இவரது நண்பர் சுபாஷ் 32. கேன் குடிநீர் வினியோகம் செய்த இவர்கள் வேலை முடிந்து நேற்று இரவு டூவீலரில் நாகர்கோவிலில் இருந்து திங்கள் சந்தைக்கு சென்று கொண்டிருந்தனர். ‘ெஹல்மட்’ அணியவில்லை.இரணியல் அருகே வந்த போது எதிரே வந்த வேன் மீது ,டூவீலர் மோதியதில் இரண்டு பேரும் துாக்கி வீசப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் பலியாயினர். இரணியல் போலீசார் விசாரிக்கின்றனர்.
பாதிரியார் மீது குண்டாஸ்
ராஜபாளையம்—விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பாதிரியார் ஜோசப் ராஜா 49, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.ராஜபாளையம் மலையடிப்பட்டி சர்ச்சில் ஜோசப் ராஜா பாதிரியாராக இருந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இரண்டு மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.ஜோசப் ராஜா மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி., மனோகர் பரிந்துரையில் கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவுப்படி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் பைனான்சியர் வீட்டில் கொள்ளை; நான்கு பேர் கைது
திருப்பூர்-திருப்பூரில், ‘பைனான்சியர்’ வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக, சகோதரர்கள் உட்பட நான்கு பேரை கைது செய்த போலீசார், 26 சவரன் நகைகள், 6 லட்சம் ரூபாய் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர், அவிநாசி ரோடு, ராயபண்டார வீதியைச் சேர்ந்தவர் சங்கமேஸ்வரன், 60; ‘பைனான்ஸ்’ தொழில் செய்கிறார். மனைவி, மகளுடன் தங்களுக்கு சொந்தமான வணிக வளாகத்தின் இரண்டாம் தளத்தில் வசிக்கிறார்.ஜூன், 12ம் தேதி இவரது வீட்டில் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள், கத்தியை காட்டி மிரட்டி, அவரது மகளை அறையில் அடைத்தும், தம்பதியை கட்டி வைத்தும், 40 சவரன் நகை, 50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தனர்.பறிமுதல்திருப்பூர் வடக்கு போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து, கொள்ளையர்களை தேடினர். கடந்த மாதம், 18ம் தேதி, திருப்பூர், வேலம்பாளையம் சொர்ண புரி லே – அவுட்டைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன்,36, என்பவரை கைது செய்து, 1 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், நேற்று திருநெல்வேலி, மருகால்குறிச்சியைச் சேர்ந்த சகோதரர்கள் வானமாமலை, 22; நல்லகண்ணு, 21; இசக்கிபாண்டி, 27; ராமையா, 22, என, நான்கு பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து, 26 சவரன் நகைகள், 6 லட்சம் ரூபாய், பழைய கார், ‘டூ – வீலர்’ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறியதாவது:கோகுலகிருஷ்ணனுக்கும், சங்கமேஸ்வரனுக்கும் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. கோகுலகிருஷ்ணன் மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்தபோது, வள்ளிநாயகம் என்பவர் அறிமுகமானார்.சிறையில் இருந்து வெளியே வந்த பின், வள்ளிநாயகத்தை தொடர்பு கொண்டு, சங்கமேஸ்வரன் வீட்டில் கொள்ளையடிக்கும் திட்டத்தை கோகுலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அவரின் அறிவுரைப்படி, மும்பையில் இட்லி கடை நடத்தி வந்த வானமாமலை, நல்லகண்ணு, இசக்கிபாண்டி, ராமையா ஆகியோரிடம், சங்கமேஸ்வரன் வீட்டில் கொள்ளையடிக்க கூறியுள்ளார்.இரட்டை கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் தொடர்புடைய அந்த நால்வரும், திருப்பூர் வந்து கொள்ளையடித்து, நகை, பணத்துடன் திருநெல்வேலி சென்று,அங்கிருந்து புனே சென்று உள்ளனர்.தலைமறைவுஇதில், வானமாமலை, நல்லகண்ணு ஆகியோர் திருநெல்வேலிக்கு வந்தபோது போலீசிடம்
இவர்களது தகவலின்படி, சென்னையில் இருந்த இசக்கிபாண்டியும், ராமையாவும் கைதாகினர். தலைமறைவாக உள்ள வள்ளிநாயகத்தை தேடி வருகிறோம்.கொள்ளையடித்த பணத்தில், 1 லட்சம் ரூபாய் பங்கு, கோகுலகிருஷ்ணனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. நகைகளை உருக்கி, பழைய கார் வாங்கிய வானமாமலையும், நல்லகண்ணுவும், தங்களின் 5 லட்சம் ரூபாய் கடனை அடைத்துள்ளனர்.பங்கு பிரிக்கப்பட்ட பணத்தை, ‘ஜாலி’யாக செலவு செய்துள்ளனர். தங்களுக்கு நெருக்கமான நபர்களிடம் சில லட்சம் ரூபாயை கொடுத்து பதுக்கினர். இசக்கிபாண்டி தாயிடம் பணத்தை கொடுத்து வைத்திருந்தார்.இவ்வாறு போலீசார் கூறினர்.
கொலைக்காக கொள்ளை!
திருநெல்வேலி, மருகால்குறிச்சியில் இசக்கிபாண்டி, ராமையா ஆகியோர் இரட்டைக்கொலை செய்தனர். இதற்கு பழிக்குப்பழியாக எதிர்தரப்பை சேர்ந்த குழுவினர், ராமையாவின் தாயை கொலை செய்தனர். ஜாமினில் வெளியே வந்த இருவரும், மும்பையில் பதுங்கி, தாயை கொன்றவர்களை பழிவாங்க காத்திருந்தனர்.தற்போது, அந்த குழுவைச் சேர்ந்தவர்கள் வெளியே வர உள்ளதை அறிந்து, கொலை செய்ய திட்டமிட்டனர். அதற்கு, பணம் தேவைப்பட்டதால், கொள்ளையில் ஈடுபட்டனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
மனைவியை கொன்ற கணவன்: தாயுடன் கைது
திருச்சி-திருச்சியில், மனைவியை கொலை செய்து, வீட்டுக்குள் உடலை வைத்து பூட்டி சென்ற கணவனையும், அவரது தாயையும் போலீசார் கைதுசெய்தனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே, சாய் நகரில் மனைவி சிவரஞ்சனி, 27, தாய் வசந்தகுமாரி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்தவர் நரசிம்மராஜ், 32. சமயபுரம் அருகே, சொந்த வீட்டில் வசித்த அவர், அந்த வீட்டை விற்று, சாய் நகரில் வாடகை வீட்டில் குடியேறினார்.கடந்த வாரம், மனைவிக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக கூறி, குழந்தைகள் இருவரையும் ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள உறவினர் வீட்டில் விட்டார்.அதன் பின், அவரது உறவினர்கள் போன் செய்தும் எடுக்காததால், சந்தேகம் அடைந்த அவர்கள், கடந்த 7ம் தேதி, திருச்சியில் உள்ள வீட்டுக்கு வந்தனர்.தொடர்ந்து, மூன்று நாட்களாக வீடு பூட்டியிருப்பதாக உரிமையாளர் தெரிவித்ததால், கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வீட்டை திறந்து பார்த்த போது, உடலில் காயங்களுடன் சிவரஞ்சனி, பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டை விற்ற பணத்தை, ‘ஆன்லைன் ரம்மி’ விளையாட்டில் செலவு செய்ததால், நரசிம்மராஜுக்கும், சிவரஞ்சனிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நரசிம்மராஜ், மனைவியை கொலை செய்து விட்டு, தாயுடன் தலைமறைவானது தெரிய வந்தது.வழக்கு பதிந்து, இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சாய் நகரில் உள்ள வீட்டுக்கு அருகில் சுற்றித் திரிந்த நரசிம்மராஜுவையும், அவர் கொடுத்த தகவல்படி, உறவினர் வீட்டில் இருந்த அவரது தாய் வசந்தகுமாரியையும் கைது செய்தனர்.
உலக நிகழ்வுகள்
மதுபான விடுதியில்15 பேர் சுட்டுக் கொலை
ஜோஹன்னஸ்பர்க்-தென் ஆப்பிரிக்காவில், மதுபான விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 15 பேர் உயிரிழந்தனர்.
தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில், சோவெட்டோ பகுதியில் உள்ள மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துஉள்ளது. இது குறித்து, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:சோவெட்டோவில் இயங்கும் மதுபான விடுதிக்கு, ஒரு ‘மினி பஸ்’சில் வந்த சிலர், திடீரென சரமாரியாக சுட்டனர். இதில், மது அருந்திக் கொண்டிருந்தவர்கள், பணியாட்கள் உள்ளிட்டோர் குண்டு பாய்ந்து பலியாகினர். இரவு நேரம் என்பதாலும், மங்கிய ஒளியில் விடுதி செயல்பட்டதாலும், பலர் தப்பிக்க வழி தெரியாமல் குண்டுகளுக்கு இரையாகியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில், 15 பேர் பலியாகியுள்ளனர்.
படுகாயம் அடைந்த பலர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய கும்பலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், இரு வாரங்களுக்கு முன், மதுபான விடுதியில், 21 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். அவர்கள் மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் மற்றொரு கோர சம்பவம் நடந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்