என் வயது 27. தனியே வசிக்கிறேன். காலையில் வேலைக்குச் செல்லும் முன் எதையும் சமைக்க முடிவதில்லை. அதனால் காலை உணவுக்கு பதில் தினமும் ஜூஸ் மட்டுமே குடித்துவிட்டு வேலைக்குச் செல்கிறேன். பிறகு மதிய உணவு எடுத்துக்கொள்கிறேன். இது சரியானதுதானா?
பதில் சொல்கிறார், பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.
காலை உணவுக்குப் பதிலாக வெறும் ஜூஸ் மட்டுமே எடுத்துக் கொள்வது சரியான பழக்கமல்ல. திட உணவுகளில் ஏதேனும் ஒன்றை சிறிதளவாவது எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அது இட்லியோ, தோசையோ, முதல்நாள் இரவு செய்த சப்பாத்தியோ… எதுவாகவும் இருக்கலாம்.
காலை உணவுக்கு ஜூஸ், அதன் பிறகு நேரடியாக மதிய உணவு சாப்பிடுவது செரிமானத்துக்கும் ஏற்றதல்ல. காலையில் சூரிய உதயம் தொடங்கி, மாலையில் சூரிய அஸ்தமனம் ஆகும் வரைதான் நம் உடலின் செரிமான இயக்கம் சீராக இருக்கும். இரவு முழுக்க சாப்பிடாமல் இருப்பதால்தான் காலையில் `பிரேக்கிங் தி ஃபாஸ்ட்’ என்ற பொருள்படும்படி பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறோம்.
சமைத்த உணவை காலையில் எடுத்துக் கொள்ளும் சூழல், நேரம் இல்லாதவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு கைப்பிடி அளவுக்கு பாதாம், அக்ரூட், பேரீச்சம் பழம், உலர் திராட்சை போன்றவற்றுடன் ஏதேனும் ஒரு பழ ஸ்மூத்தி எடுத்துக் கொள்ளலாம்.
ஜூஸுடன் ஒப்பிடும்போது ஸ்மூத்தி ஆரோக்கியமானது. ஜூஸில் நார்ச்சத்து இருக்காது. அதாவது ஜூஸ் தயாரிக்கும்போது அதை வடிகட்டி, நார்ச்சத்தை குப்பையில் வீசுகிறோம். அந்த ஜூஸில் சத்துகள் பெரிதாக இருக்காது. ஆனால், ஸ்மூத்தி என்பது பழத்தை அரைத்து, வடிகட்டாமல் அப்படியே குடிப்பது.
ஸ்மூத்தியிலேயேகூட உலர் பழங்களைச் சேர்த்துக் குடிக்கலாம். அதில் வைட்டமின்கள், தாதுச்சத்துகள், நார்ச்சத்து என எல்லாம் இருப்பதால் காலை உணவைத் தவிர்க்கும் பழக்கம் உள்ளோர், ஸ்மூத்தி எடுத்துக்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.