சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி – நெல்சன் இணையும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.
`அண்ணாத்த’ ரஜினி – ஃபீஸ்ட் நெல்சன் இருவரும் மீண்டும் சன் பிக்சர்ஸுடன் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக ஐஸ்வர்யா ராய், கிட்டத்தட்ட உறுதி செய்யவுள்ளார் என்கிறது படக்குழு. அதாவது ஐஸ்வர்யா ராய், நெல்சனிடம் கதையைக் கேட்டுவிட்டார். அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும், இன்னும் சில நாளுக்குள் பதில் சொல்வதாகவும் சொல்லியிருப்பதாகத் தகவல். தவிர, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி ஆகியோர் கமிட் ஆகியுள்ளனர். டெக்னிக்கல் டீமும் ‘பீஸ்ட்’டில் பணியாற்றியவர்கள்தான்.
இது குறித்து ரஜினி – நெல்சன் வட்டாரத்தில் விசாரித்தோம்.
அடுத்த மாதம் 10-ம் தேதி படப்பிடிப்புக்குக் கிளம்புவதற்கு இப்போதைக்கு முடிவு செய்து வைத்திருக்கிறார்கள். ‘அண்ணாத்த’ வெளியாகி ஆறு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டதால், ரஜினியும் படப்பிடிப்புக்குக் கிளம்பத் தயாராகிவிட்டார். ஆனால், ஹீரோயின் அனேகமாக இந்த வாரத்தில் முடிவாகிவிடுவார். அது நிச்சயமாக ஐஸ்வர்யா ராய்தான் என்கிறார்கள்.
இதனிடையே இன்னொரு சுவாரஸ்யத் தகவலையும் சொல்கிறார்கள். நெல்சனுக்குத் திரைக்கதையில் கே.எஸ். ரவிக்குமார் உதவியதாக வரும் தகவல் பொய். அப்போதைய சூழலில் ஒரு கட்டத்தில் நெல்சனே ரஜினிடம், `கே.எஸ்.ஆர் போன்ற சீனியர்களிடம் இந்தக் கதையை விவாதிக்கலாமா’ எனக் கேட்டதாகவும், அதை ரஜினி மறுத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். `உங்க ஒர்க் மேல நம்பிக்கை இருக்கு. எதைப் பத்தியும் கவனத்தில் கொள்ளாமல் தைரியமா எழுதுங்க நெல்சன்’ என ரஜினி நம்பிக்கை கொடுத்த பிறகு புல் கான்பிடன்டாகக் களமிறங்கியிருக்கிறார் நெல்சன்.
‘ஜெயிலர்’ கதை விவாதம் நடந்தபோது சில நாள்கள் ரஜினியே நேரில் வந்து கதை குறித்த தனது கருத்துகளையும் சொல்லியிருக்கிறார். ‘கதையில் காமெடி தூக்கலாக இருக்கட்டும். உங்க காமெடி டீம் நடிகர்கள் யாரெல்லாம் உண்டோ அவங்கள அப்படியே பயன்படுத்திக்கங்க. நடிகர்கள் தேர்வு உங்க சாய்ஸ்’ என ரஜினி சொல்லியிருப்பதுடன், இயக்குநரிடம் தனது முந்தைய காமெடி படங்களான ‘தில்லு முல்லு’ உட்பட சில படங்களின் ஸ்டோரி டிஸ்கஷனின்போது நடந்த சில விஷயங்களையும் சொல்லி திடமான நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.
ரஜினியின் இந்த ஆர்வத்தைக் கண்டு, ‘ரஜினி இவ்வளவு சாதனைகள் செய்த பிறகும்கூட, இன்னமும் ஒரு புதுமுக ஹீரோ போல் இயக்குநரின் ஆபீஸுக்கே தேடி வந்து கதையில் இன்வால்வ் ஆனதைக் கண்டு நெல்சனின் உதவி இயக்குநர்களின் வட்டாரமே வியக்கிறதாம்.
‘அண்ணாத்த’வை முழுக்க முழுக்க ஐதராபாத்தில் அரங்கங்கள் அமைத்து முழு வீச்சில் எடுத்தது போல, இந்தப் படத்தை எடுத்து முடிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருப்பதால், அங்கே அரங்கம் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்துவருகின்றன என்கிறார்கள்.