Kaduva: மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்ச்சை வசனம் – பிரித்விராஜின் படத்துக்கு கடும் எதிர்ப்பு!

பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள ‘கடுவா’ திரைப்படம் கடந்த 7-ம் தேதி வெளியானது. ஷாஜி கைலாஸ் இயக்கும் படங்களில் அதிரடி சண்டைக் காட்சிகளுக்குப் பஞ்சமிருக்காது. அந்த வகையில் ஆக்‌ஷன் சினிமாவாக வெளிவந்துள்ள ‘கடுவா’ கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் ஆக்ஷன் சினிமா விரும்பிகளைத் திருப்திப்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் ‘கடுவா’ படத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து இடம்பெற்றுள்ள ஒரு வசனம் தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. “மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிறப்பதற்கு அவரவர் பெற்றோர் செய்த பாவம்தான் (கர்மா) காரணம்” என ஒருகாட்சியில் பேசப்படும் வசனத்துக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதையடுத்து கேரள மாற்றுத்திறனாளிகள் ஆணையர் ஷைலஜா ‘கடுவா’ இயக்குநர் ஷாஜி கைலாஸ், தயாரிப்பாளர்கள் சுப்ரியா மேனன், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கடுவா சினிமா காட்சி

மாற்றுத்திறனாளிகள் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில், “மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் 2016 பிரிவு 92-ன் படி கடுவா சினிமாவில் குறிப்பிட்ட அந்தக் காட்சி குற்றமானதாகும். எனவே அதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த வசனத்துக்காக ‘கடுவா’ இயக்குநர் ஷாஜி கைலாஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஷாஜி கைலாஸின் அறிவிப்பில், “நான் இயக்கிய கடுவா சினிமாவில் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோரை வேதனைப்படுத்தும் வகையில் காட்சி இடம்பெற்றதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இதை மனிதத் தவறாக எடுத்துக்கொண்டு மன்னிக்க வேண்டும். திரைக்கதையில் அந்த வசனம் வரும்போது கதாநாயகன் பிரித்விராஜோ, இயக்கிய நானோ அதன் மற்றொரு பக்கம் பற்றி யோசிக்காமல் செய்துவிட்டோம் என்பதுதான் உண்மை. வில்லனையும், அவனது கொடூரத்தையும் பார்வையாளர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அந்த வசனத்தின் பின்னணியிலிருந்தது. மாற்றுத்திறனாளி பிள்ளைகளின் பெற்றோரின் வருத்தமான பதிவுகள் என் கவனத்துக்கு வந்தன. உங்களுக்கு உலகில் மிகவும் மதிப்பு மிக்கது உங்கள் பிள்ளைகள்தான் என்றும், அவர்களுக்காக நீங்கள் வாழ்கிறீர்கள் என்றும் புரிந்துகொண்டு நான் ஒன்றைச் சொல்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் மனதுக்கு ஏற்பட்ட காயத்துக்கு இந்த வார்த்தை பரிகாரம் ஆகாது என்பதைப் புரிந்துகொண்டு மறுபடியும் கேட்கிறேன், என்னை மன்னித்துவிடுங்கள்” எனக் கூறியுள்ளார்.

இயக்குநர் ஷாஜி கைலாஷ்

இயக்குநர் ஷாஜி கைலாஸின் செய்திக் குறிப்பை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த நடிகர் பிரித்விராஜ், “மன்னிக்கவும். தவறு நடந்துவிட்டதை ஒப்புக்கொள்கிறோம், ஏற்றுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் குறித்த காட்சியால் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து, அந்த காட்சியை நீக்க சென்சார் போர்டுக்கு விண்ணப்பிக்க ‘கடுவா’ படக்குழு தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.