கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் வெப் டெவலப்பர் கோபால கிருஷ்ணன். இவர் `ராக்கெட் பால்’ என்ற புதிய விளையாடை உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் எனத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். நாகர்கோவிலில் உள்ள கோபால கிருஷ்ணனின் அலுவலகத்தில் அவரை சந்தித்து பேசினேன். எடுத்த எடுப்பிலேயே ராக்கெட் பால் தோன்றிய விதம் பற்றி பேசத்தொடங்கினார்.
“நான் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்கிறேன். வெப் டெவலப்பரா வேலை செய்கிறேன். 2002 வரை தெருவில் நானும் என் தம்பி சதீஷும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருந்தோம். என் தம்பி என்னைவிட ஒன்றரை வயது இளையவன். அவனுக்கு போலியோ அட்டாக் இருந்ததால் குதிகால் தரையில் ஊன்றாமல் நடந்துவந்தான். அதை சரி செய்ய ஆப்பரேஷன் செய்தபோது இடுப்புக்கு கீழ் செயல்படாமல் போனது. அவன் வீட்டிலேயே முடங்கிப்போனான். நான் நண்பர்களுடன் வெளியே விளையாடிவிட்டு வரும்போது ‘என்னை தனியா விட்டுட்டு நீ வெளியே விளையாடப்போறியே’ன்னு தம்பி வருத்தப்பட்டான். அதனால வீட்டுக்குள்ளேயே செஸ், கேரம்போடு விளையாடினோம். வெளிய பந்து வீச்சு விளையாடினவனுக்கு உட்கார்ந்து விளையாடிய விளையாட்டு பிடிக்கல.
அதனால காலி பிளாஸ்டிக் டப்பாக்களை வரிசையா அடுக்கி ஒட்டி வச்சு, அதில பிளாஸ்டிக் பந்தை எறிஞ்சு விளையாடினோம். டப்பாவில் பந்து பட்டா அவங்களுக்கு பாயிண்ட் வச்சு விளையாடினோம். பந்து பட்டா டப்பாக்கள் விழுந்திரும். அதனால மரக்கட்டையை நடுவில நட்டு வச்சு பந்துபோட்டு விளையாடினோம். அப்ப மரத்தில பட்டு பால் திரும்ப வந்துச்சு. அதனால கேமோட தன்மை மாறிடிச்சு. அந்த மரக்கட்டையை சுற்றி வட்டம்போட்டு பால் அதில விழுந்தா அவுட்டுன்னு ரூல்ஸ் வச்சு விளையாடினோம். 2007-ல தம்பி இறந்துவிட்டான். அதன் பிறகு நான் தம்பிக்கூட விளையாடினதை மாற்றுத்திறனாளிகளுக்கான இண்டோர் கேமா மாற்ற நினைச்சேன். அதன் பிறகு பல நாண்பர்கள் ஆலோசனைப்படி அதை அவுட்டோர் விளையாட்டாக மாற்ற நினைச்சேன். தம்பியுடன் விளையாடிய பந்து விளையாட்டை அடிப்படையாக வைத்துதான் ராக்கெட் பால்ங்கிற விளையாட்டை கண்டுபிடித்தேன்” என்றவர் விளையாட்டின் ஆடுகளம் பற்றி சொல்லத்தொடங்கினார்.
“ராக்கெட் பால் கிரவுண்டின் நீளம் 40 மீட்டர். அகலம் 20 மீட்டர். 20 மீட்டரில் செண்டர் லைன் போட்டு ஆடுகளம் இரண்டாக பிரிக்கப்படும். அதன் பிறகு இரண்டு பக்கத்திலும் 10 மீட்டர் செண்டர் லைன்கள் போட்டு அதன் நடுவில் இரண்டு போல்களை நட்டுவைக்க வேண்டும். போல்களின் உயரம் 7 அடி. அதில் 5.5 அடி மஞ்சள் நிறத்திலும், 1.5 அடி வெள்ளை நிறத்திலும் இருக்கும். போல்களை சுற்றி மூன்று மீட்டர் சுற்றளவுக்கு வட்டமாக கோடு போடப்பட்டிருக்கும். இதுதான் ஆடுகளத்தின் அமைப்பு. ஒரு அணியில் 7 வீரர்கள் இருபார்கள். 5 பேர் களத்தில் இறங்கி விளையாடுவார்கள் இரண்டுபேர் மாற்று வீரர்கள். இரண்டு அணிகளிக்கும் 10 பேர் களத்தில் இறங்கி விளையாடுவார்கள்” என்றவர் விளையாட்டின் விதிமுறைகளையும் விவரித்தார்.
“விளையாட்டு தொடக்கத்தில் டாஸ் போட்டு யாருக்கு எந்த பக்கம் கிரவுண்ட் வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும். தங்கள் பக்கம் உள்ள கம்பத்தை பாதுகாத்து எதிர் அணியின் கம்பத்தில் பால் எறிய வேண்டும் என்பதுதான் கான்செப்ட். சென்டர் லைனில் இருந்து பாலை நடுவர் தூக்கி மேலே போடுவார். அந்த பாலை பாஸ் செய்து விளையாட்டைத் தொடங்க வேண்டும். நடுவர் வீசிய பால் கையில் கிடைத்த உடனே எதிர் அணியின் கம்பத்தை நோக்கி வீசலாம். அல்லது, பந்தை நிலத்தில் படும்படி மற்றவர்களுக்கு பாஸ் பண்ணி எதிர் அணியில் உள்ள கம்பத்தின் வெள்ளை பகுதியில் படும்படி எறிய வேண்டும். விளையாட்டை தொடங்கும்போதே கம்பத்தின் வெள்ளைப்பகுதியில் பாலை எறிந்து அந்த பால் ரிட்டன் வரும்போது எறிந்தவரோ அல்லது அவரது அணியினரோ பாலை பிடித்தால் 2 பாயிண்ட் கிடைக்கும். கம்பத்தின் வெள்ளைப்பகுதியில் பால் பட்டு கிரவுண்டில் விழுந்தால் அந்த அணிக்கு ஒரு பாயிண்ட் கிடைக்கும்.
பாலை மற்றவர்களுக்கு பாஸ் செய்து விளையாடும் போது கம்பத்தின் வெள்ளைப்பகுதியில் பட்டு பால் திரும்பி வரும் போது எறிந்தவரோ அல்லது எறிந்தவரின் அணியை சேர்ந்தவரோ பாலை பிடித்தால் அந்த அணிக்கு 4 பாயிண்ட் வழங்கப்படும். பால் கம்பத்தில் பட்டு கம்பத்தைச் சுற்றி உள்ள 3 மீட்டர் சுற்றளவுக்குள் விழுந்தால் அந்த டீமுக்கு பாயிண்ட் கிடையாது. 3 மீட்டத் தாண்டி கிரவுண்டில் விழுந்தால் அந்த அணிக்கு 2 பாயின் வழங்கப்படும். ஒரு அணியைச் சேர்ந்தவர் கம்பத்தில் எறிந்த பால் ரிட்டன் வரும்போது எதிர் அணியினர் பிடித்துவிட்டால், பல் வீசியவர் விக்கெட் ஆகிவிடுவார். அவுட் என்றால் அவர் கிரவுண்டை விட்டு வெளியே போகவேண்டாம். கிரவுண்டுக்குள் நின்று விளையாடலாம், ஆனால் அவர் பாஸிங் பிளேயராக மாறிவிடுவார். பாலை மற்றவர்களுக்கு பாஸ் செய்யலாம். ஆனால் அவர் கம்பத்தில் பாலை எறிந்து கோல்போடக்கூடாது.
ஒரு அணியில் 4 பேர் விக்கெட் ஆகிவிட்டால் விளையாட்டு முடிந்துவிடும். மேட்ச் ஸ்டாப் ஆகும்போது எதிர் டீமில் எத்தனை விக்கெட் மிச்சம் இருக்கிறதோ அவர்களுக்கு தலா ஒரு பாயின் வீதம் அந்த அணிக்கு வழங்கப்படும். பால் பாஸ் செய்யும் போது நேரடியாக அவரது கைக்கு வீசி எறியக்கூடாது. நிலத்தில் டச் ஆகி மற்றவர்கள் கைக்கு செல்லும்படி பாஸ் செய்ய வேண்டும். ஒரு அணியைச் சேர்ந்தவர் பாலை பாஸ் செய்யும்போது எதிர் அணியினர் பாலை கையால் தடுத்து பிடிக்கலாம். ஒரு அணியினர் ஒரு பாயிண்ட் எடுத்துவிட்டால் அடுத்ததாக பாலை எதிர் அணியினரிடம் கொடுத்துவிட வேண்டும். அவர்கள் செண்டர் லைனில் இருந்து விளையாட்டை தொடங்குவார்கள். அதே சமயம் ஒருவர் விக்கெட் ஆகிவிட்டால் விளையாட்டு தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். கம்பத்தை நோக்கி கோல்போட முயலும்போது பால் மிஸ் ஆகிச்செல்லும்போது அந்த பாலை பிடிக்கும் அதே அணியைச் சேர்ந்தவர் மீண்டும் கம்பத்தில் பாலை வீசக்கூடாது. தரையில் பால் டச் ஆகும்படி வேறு யாருக்காவது பாஸ் செய்துவிட்டு மீண்டும் கோலுக்கு முயற்சி செய்யலாம். இந்த விளையாட்டுக்காக வாலிபாலை விட சிறிய அளவில் பிரத்யேகமாக பால் தயாரித்து வாங்கியுள்ளேன்” என்றவர் ராக்கெட் பால் விளையாட்டை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்த எடுக்கும் முயற்சி பற்றி கூறினார்.
“ராக்கெட் பால் விளையாட்டுக்கு முறையான அங்கீகாரம் கிடைத்து அதை ஒலிம்பிக்கிறகு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கு முதலில் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் தமிழ்நாடு (SAV) இந்த விளையாட்டை அங்கீகரிக்க வேண்டும். அடுத்ததாக ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்திய (SAI) இந்த விளையாட்டை அங்கீகரிக்க வேண்டும். இந்த விளையாடுக்கான அங்கீகாரத்தை சாய் அமைப்பிடம் பெறும் முயற்சியின் முதற்கட்டமாக ராக்கெட் பால் பெடரேஷன் ஆஃப் இந்தியா என்ற பெயரில் தமிழ்நாடு சொசைட்டி ஆக்ட்-ல் இந்த விளையாட்டை பதிவு செய்துள்ளேன். அதன் பிறகு இரண்டு அணிகளுக்கு பயிற்சி கொடுத்து, கடந்த மாதம் 26-ம் தேதி நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் வைத்து அறிமுக விளையாட்டை நடத்தினோம். அடுத்ததாக திருப்பூரில் வைத்து இந்த விளையாட்டை விளையாட உள்ளோம். நான் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளையும் பிட் இந்தியா அமைப்பிற்கு அனுப்பிக்கொடுத்து அடுத்தடுத்த கட்டத்துக்கு விளையாட்டை எடுத்துச் செல்கிறேன்.
கிரிக்கெட், வாலிபால் போன்ற விளையாட்டுகள் வெளிநாடில் இருந்து வந்தவை. தமிழ்நாட்டில் இருந்து கபடி, சிலம்பம், கோ கோ விளையாட்டுக்கள் வெளியே போனது. அதுக்கு பிறகு புதிதாக எந்த விளையாட்டையும் தமிழகம் அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் வெளியே உள்ள பல புதிய விளையாட்டுக்கள் தமிழ்நாடுக்குள் வந்துவிட்டன. எனவே தமிழ்நாட்டில் இருந்து புதிய விளையாட்டை அறிமுகப்படுத்துவதற்காக ராக்கெட் பால் கேமை நான் கடுமையா முன்னெடுத்துச் செல்கிறேன்” என்று கூறி முடித்தார் கோபால கிருஷ்ணன்.