இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான ஏலம் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த ஏலத்தில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் ஏலத்தில் கலந்து கொள்ள முன்பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த ஏலத்தில் திடீரென அதானி குழுமம் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5ஜி தொழில்நுட்பம்
அடுத்த தலைமுறைகளுக்கான 5ஜி தொழில்நுட்பத்தை ஏலம் எடுப்பதற்காக இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், மற்றும் வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் களத்தில் இருந்தன என்பது தெரிந்ததே.
அதானி குழுமம்
இந்த நிலையில் திடீரென அதானி குழுமம் போட்டியில் நுழைய உள்ளதாக தெரிவித்துள்ளதை அடுத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்தன. குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டது.
அதானி-அம்பானி
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டும் ஏலத்தின் போட்டியில் இருந்தால் கண்டிப்பாக ஜியோ ஏலத்தில் வெற்றி பெற்றுவிடும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அதானி திடீரென உள்ளே நுழைந்து இருப்பதால் அம்பானி மற்றும் அதானி இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதானி விளக்கம்
ஆனால் அதே நேரத்தில் அதானி குழுமம் தன்னுடைய அறிக்கையில் தாங்கள் 5ஜி ஏலம் எடுக்க முன் வருவதற்கு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் ஆகியவற்றின் பயன்பாட்டிற்கு தான் என்றும் பொதுமக்கள் நெட்வொர்க் வசதிக்காக ஏலம் எடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தது.
தொலைத்தொடர்பு துறையில் அதானி
இருப்பினும் அதானி குழுமம் ஏலத்தில் திடீரென நுழைந்து உள்ளதை அடுத்து 5ஜி ஏலம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் அதானி குழுமத்திற்கு சென்றால் தொலைத்தொடர்புத் துறையில் அதானி குழுமம் நுழைவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் அதன் முதல் படியாக தான் அந்நிறுவனம் 5ஜி ஏலத்தில் கலந்து கொள்ள முன் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏர்டெல் பங்குகள்
5ஜி ஏலத்தில் திடீரென அதானி குழுமம் உள்ளே நுழைய இருப்பதாக செய்திகள் வெளியானதன் காரணமாக நேற்று ஏர்டெல் பங்குகளின் விலை 5 சதவீதம் அளவு குறைந்ததாக தகவல்கள் வெளியாகின. ஜியோ நிறுவனத்தின் பங்குகளும் குறைந்துள்ளதாகவும் வோடோபோன் ஐடியா பங்குகள் மட்டும் ஓரளவு லாபத்துடன் வர்த்தகமானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போட்டி
ஜூலை 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் 5 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்பதற்கு ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, அதானி குழுமம் ஆகிய நான்கு நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தாலும் உண்மையான போட்டி அதானி மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்களுக்கு இடையே தான் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசுக்கு லாபம்
அதானி குழுமம் உள்ளே நுழைந்ததால் ஏலத்தொகை எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும் என்றும் இது அரசுக்கு தான் மிகப் பெரிய லாபத்தை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தை எடுக்க நீண்டகாலமாக திட்டமிட்டுள்ள ஜியோ நிறுவனம் அவ்வளவு எளிதில் அதானி குழுமத்திற்கு விட்டு கொடுக்காது என்றும் கூறப்படுகிறது.
Bharti Airtel shares tumble after Adani Group enters race for 5G spectrum
Bharti Airtel shares tumble after Adani Group enters race for 5G spectrum | அதானி வருகையால் ஆட்டம் கண்ட ஏர்டெல் பங்குகள்: எல்லாத்துக்கும் இதுதான் காரணம்!