அமெரிக்கா: கருக்கலைப்பு தடைச் சட்டம்: விவகாரமான கர்ப்பிணிப் பெண்ணின் வாதம் -குழம்பிய காவல்துறையினர்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் மாறுபட்ட சாலை அமைப்பு நடைமுறையிலிருக்கிறது. தனியாகச் செல்பவர்களுக்கென தனிப் பாதையும், இருவர் செல்வதற்கென தனிப் பாதையும், கனரக வாகனங்கள் செல்வதற்கென தனிப் பாதையும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த சாலைப் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இரண்டு பயணிகள் மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் செல்வதற்கான பாதையில் 8 மாத கர்ப்பிணியான பிராந்தி போட்டோன் என்ற பெண் பயணித்திருக்கிறார். அவரைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், “இருவர் பயணிக்கும் சாலையில் தனியாகச் செல்லும் நீங்கள் ஏன் பயணித்தீர்கள்?” எனக் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

அமெரிக்கா – போராட்டம்

அப்போது அந்தப் பெண், “நான் எங்கே தனியாக வந்தேன்… என்னுடன் இன்னொருவர் இருக்கிறார்” எனக் கூறியபோது, எங்கே என காவல்துறை வினவியுள்ளனர். அதற்கு அந்தப் பெண் தன் வயிற்றைச் சுட்டிக்காண்பித்து, “நானும் என் குழந்தையும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அமெரிக்க உச்ச நீதிமன்றம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பெண்கள் கருக்கலைப்புக்கு அனுமதியளித்த சட்டத்தை மாற்றியமைத்ததுள்ளது. அதற்கான காரணமாக வயிற்றில் இருப்பதும் ஓர் உயிர்தான் என விளக்கமளித்துள்ளது. எனவே என்னுடைய வயிற்றில் இருக்கும் குழந்தையை ஒரு நபராகத் தானே கணக்கிலெடுக்க முடியும்?” எனக் கூறியிருக்கிறார்.

வெள்ளை மாளிகை-அமெரிக்கா

அதைக் கேட்ட காவல்துறையினர், “இரண்டு நபர்களும் உடலுக்கு வெளியே இருக்க வேண்டும். அதனால் கர்ப்பமாக இருப்பது கணக்கிடப்படாது. நீதிமன்ற தீர்ப்பு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் சட்டங்களுக்குப் பொருந்தாது” எனக் கூறி தவறானப் பாதையில் பயணித்ததற்கு அந்தப் பெண்ணிடம் அபராத கட்டணம் வசூலித்தனர். அதைத் தொடர்ந்து அந்தப் பெண் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்துக்குச் செல்லவிருப்பதாக தகவல் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.