இங்கிலாந்து ராணி எலிசபெத்தை விட சொத்து மதிப்பு அதிகம் வைத்திருப்பவர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகளும், முன்னாள் பிரிட்டன் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மனைவியுமான அக்ஷதா மூர்த்தி என்பது அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் பிரிட்டன் நிதி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார் ரிஷி சுனக்.
இந்த நிலையில் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி பத்திரிக்கையாளர்களுக்கு தேநீர் வழங்கிய புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
அக்ஷதா மூர்த்தி
இங்கிலாந்து ராணியை விட செல்வந்தரான அக்ஷதா மூர்த்தி நினைத்தால் தன்னுடைய வேலையாட்களிடம் கூறி தனது வீட்டின் வெளியே நிற்கும் பத்திரிகையாளர்களுக்கு தேநீர் கோப்பைகளை கொடுக்க உத்தரவிடலாம். ஆனால் அக்ஷதா மூர்த்தி தானே தேநீர் கோப்பைகளை எடுத்து வந்து பத்திரிகையாளர்களுக்கு வழங்கியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேநீர் கோப்பை
பத்திரிகையாளர்கள் மத்தியில் தனது கணவருக்கு நன்மதிப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தேநீர் கோப்பைகளை பத்திரிகையாளர்களுக்கு அக்ஷதா மூர்த்தி தன் கைப்பட வழங்கினார்.
பிரதமர் வேட்பாளர்
சமீபத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அக்ஷதா மூர்த்தியின் கணவர் ரிஷி சுனக் பெயர் தான் பிரதமர் பதவிக்கு பரிசீலனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதோடு தனது பிரச்சாரத்தையும் தொடங்கி உள்ளார்.
ரிஷி சுனக்
இந்த நிலையில் தான் ரிஷி சுனக்கை பேட்டி எடுக்க கடந்த சில நாட்களாக பத்திரிகையாளர்கள் அவரது வீட்டின் முன் குவிந்து வருகின்றனர். தனது வீட்டின் முன் காத்திருந்த பத்திரிகையாளருக்கு ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தி தேநீர் கோப்பைகள் வழங்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
தேநீர் கோப்பையின் விலை
பத்திரிக்கையாளர்களுக்கு தேநீரும் பிஸ்கட்டும் அவர் வழங்கியது குறித்த போட்டோக்கள் வைரல் ஆகி வரும் நிலையில் அதில் ஹைலைட் என்னவென்றால் தேநீர் வழங்கப்பட்ட கோப்பையின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.3600 என்பது தான். இந்த தகவல் பத்திரிகையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த கோப்பையில் பத்திரிகையாளர்களுக்கு தேநீர் கொடுத்தது ஒரு விதத்தில் பாசிட்டிவ் என்றாலும், ஒரு கோப்பையை வாங்கும் பணத்தில் இரண்டு குடும்பங்கள் வயிறார சாப்பிடலாம் என்ற நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்கள் நெகட்டிவ்வாக பார்க்கப்படுகிறது.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
ஏற்கனவே அக்ஷதா மூர்த்தி மீது பிரிட்டனுக்கு வெளியே இருந்து கிடைக்கும் வருவாய்க்கு வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் எந்த சலுகையும் இல்லாமல் வரியை செலுத்துவேன் என்று ஒரே நாளில் அந்த சர்ச்சைக்கு அக்ஷதா மூர்த்தி முற்றுப்புள்ளி வைத்தார்.
பிரதமராகும் வாய்ப்பு
இந்த நிலையில் பிரதமர் வேட்பாளராக களம் இறங்கியிருக்கும் ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமர் ஆவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அதற்கேற்றார்போல் இங்கிலாந்து ராணியை விட அதிக செல்வந்தராக இருக்கும் அக்ஷதா மூர்த்தி பத்திரிக்கையாளரை கவர தேநீர் கோப்பையை வழங்கியதும் நன்றாக வேலை செய்கிறது என்றே கூறுகின்றனர்.
நிஜமாகுமா?
இந்தியர்களை பல நூறு வருடங்கள் அடிமையாய் வைத்திருந்த பிரிட்டனை ஆட்சி செய்யும் வாய்ப்பு ஒரு இந்தியருக்கு கிடைத்திருக்கும் நிலையில் அந்த வாய்ப்பு நிஜமாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Rishi Sunak wife Akshata Murty serves tea to journalists!
Rishi Sunak wife Akshata Murty serves tea to journalists! | இங்கிலாந்து ராணியை விட செல்வந்தர் அக்ஷதா மூர்த்தி.. தேநீர் சப்ளை செய்தது ஏன் தெரியுமா?