சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் முதல் பெண் ஓட்டுநராக இந்து பிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
சிஎம்டிஏ என்று அழைக்கப்படும் என்று சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 10 ஓட்டுநர்களை நியமித்து நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி கடந்த திங்களன்று பணி ஆணைகளை வழங்கினார். இவற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்து பிரியா.
25-இல் ஒருவர்
கொடுங்கையூரைச் சேர்ந்த 34 வயதான இந்து பிரியாவின் கணவர் ஆட்டோ ஓட்டுநர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கும்மிடிபூண்டியில் உள்ள அரசு சாலை போக்குவரத்து நிறுவனத்தில் இவர் ஓட்டுநர் பயிற்சி பெற்றுள்ளார். அங்கு ஓட்டுநர் பயிற்சி பெற்ற 25 ஓட்டுநர்களில் இவர் ஒருவர் மட்டும்தான் பெண். பத்தாம் வகுப்பு முடிந்த பிறகு இவர் இந்த பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
உபர் ஓட்டுநர்
இந்து பிரியா ஓட்டுநர் பயிற்சி முடிந்த பின்பு தனியார் நிறுவனங்களில் ஓட்டுநராக பணியாற்றி உள்ளார். மேலும் வாடகை கால் டாக்சியான உபரிலும் ஓட்டுநராக பணியாற்றி உள்ளார். இதனைத் தொடர்ந்து சிஎம்டிஏவில் பணிக்கு விண்ணப்பித்து தற்போது ஓட்டுநராக தேர்வு பெற்றுள்ளார்.
அமலாக்கப்பிரிவு
இந்து பிரியா சிஎம்டிஏவில் அமலாக்கப் பிரிவில் பணியாற்ற உள்ளார். இந்த பிரிவானது சென்னையில் உள்ள விதி மீறல் கட்டிடங்களை ஆய்வு செய்து அவற்றுக்கு சீல் வைக்கும் பணியை மேற்கொள்ளும் பிரிவு ஆகும்.