புதுடெல்லி: நாட்டிலேயே அதிகமாக 80 மக்களவை தொகுதிகள் உத்தர பிரதேசத்தில்தான் உள்ளன. அவற்றில், கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக 62 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்பின்னர் சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக தனி பெரும்பான்மையுடன் 2-வது முறை ஆட்சி அமைத்து சாதனை படைத்தது. எனினும், மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு முஸ்லிம் கூட பாஜக வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. இதே பாணியை உத்தராகண்ட், ம.பி., பிஹார், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் பாஜக பின்பற்றியது.
இத்தனைக்கும் உ.பி.யில் முஸ்லிம்கள் 26 சதவிகிதம் பேர் உள்ளனர். எனினும், சட்டப்பேரவை தேர்தலில் 8 சதவிகிதமும் அதைவிட அதிகமாக 2019 மக்களவை தேர்தலிலும் முஸ்லிம்கள் வாக்களித்தனர். தற்போது, உ.பி.யில் பாஜக.வின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் சூழல் தெரிகிறது. இதற்காக, முஸ்லிம்களில் ‘பஸ்மந்தா’ எனப்படும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினர் மீது பாஜக கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.
முதல் கட்டமாக பஸ்மந்தாவில் பிற்படுத்தப்பட்ட 8 பிரிவினரை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களில் சேர்க்க பாஜக ஆளும் உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது. ஏனெனில், இந்த பிரிவு முஸ்லிம்கள் செய்து வரும் தொழிலையே செய்து வரும் இந்துக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினராக உள்ளனர். அதனால், தங்களையும் அப்பிரிவில் சேர்க்க வேண்டும் என்று பஸ்மந்தா முஸ்லிம்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து முஸ்லிம் சமூக ஆய்வாளர் முனைவர் பயாஸ் அகமது பைஸி கூறும்போது, ‘‘இந்து உள்ளிட்ட வேற்று மதங்களில் இருந்து, முஸ்லிமாக மாறியவர்கள் பஸ்மந்தா என்றழைக்கப்படுகின்றனர். பஸ்மந்தாவினர் உ.பி.யில் 90 சதவிகிதம் உள்ளனர். மீதம் உள்ள 10 சதவிகிதத்தினர் ஷேக், சையது உள்ளிட்ட பிரிவுகளுடனான அஷரப்பி பிரிவு முஸ்லிம்கள். எனவே, பாஜக பஸ்மந்தாவினருக்கு சில சலுகைகளை அளித்து பயன் பெற திட்டமிடுகிறது’’ என்றார்.
இவர்கள் எண்ணிக்கை உ.பி.யில் அதிகம் என்பதால் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றவும் பாஜக பரிசீலனை செய்ய உள்ளது. இதற்கான முடிவுகள் தெலங்கானாவில் நடந்த பாஜக தேசியசெயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உ.பி.யில் முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகளில் பாஜக.வுக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
இவை, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் பிரியும் இந்து வாக்குகளை சமாளிக்க உதவும் என பாஜக கருதுகிறது. இத்துடன், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக தோல்வி அடைந்த தொகுதிகளிலும் பஸ்மந்தாவினர் கை கொடுப்பார்கள் என்று பாஜக நம்புகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்த அதிக எண்ணிக்கையில் பஸ்மந்தா பிரிவினரை பாஜக.வில் சேர்ப்பதுடன், முஸ்லிம்கள் அதிகம்கொண்ட தொகுதிகளில் அவர்களில் ஒருவரையே வாக்குச் சாவடி பொறுப்பாளராக நியமிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.