அதிமுகவுக்கு உரிமை கொண்டாடுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கொரியர் மூலமாக ஓபிஎஸ் சார்பில் என்று காலை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்களை தவிர வேறு யாரும் அதிமுகவை உரிமை கொண்டாட அனுமதிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற அதிமுகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஓபிஎஸ் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனையடுத்து, ஓ பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் நியமனத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டது.
இந்நிலையில், ஓ பன்னீர்செல்வம் சார்பாக இன்று காலை கொரியர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், “அதிமுகவை பொறுத்தவரை ஒருங்கிணைப்பாளர்களிடம் மட்டுமே கட்சி இருக்கிறது. ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்ற அடிப்படையில் என்னிடமே அதிமுக தற்போது உள்ளது. புதிய பொறுப்புகளில் யாரேனும் கட்சியை உரிமை கோருவதற்கு அனுமதிக்க கூடாது” என்று அந்த கடிதத்தை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை சுட்டிக்காட்டி, சட்ட விதிகளின்படியே பொதுக்குழு நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், “சட்டத்திற்கு புறம்பாக நேற்று நடைபெற்ற இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டு இருப்பதாகவும், அது குறித்து நாங்கள் மேல் முறையீட்டுக்கு செல்வதால், தற்போது இடைக்கல பொதுச் செயலாளர் அல்லது பொருளாளர் ஆகிய பதவியின் பெயரில் அதிமுகவை தனி நபர்கள் உரிமை கோருவதற்கு அனுமதிக்க கூடாது” என்று கடிதத்தில் ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார்.