விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செய்யாத்துரை. இவரும் இவரின் மகன் நாகராஜனும் இணைந்து நடத்திவரும் எஸ்பிகே குழுமம், தமிழக அரசின் சாலை ஒப்பந்தப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளைச் எடுத்து செய்து வருகிறது.
அதிமுக எடப்பாடி பழனிசாமியின் சம்மந்திக்கு செய்யாத்துரை நெருக்கமானவர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு எஸ்.பி.கே குழுமத்துக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது, 150 கோடி ரூபாய் பணமும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், அருப்புக்கோட்டையிலுள்ள நெடுச்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரையின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர்.
அலுவலகம் மற்றும் வீடுகளில் சுமார் 20 -க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கடந்த நான்கு நாட்களாக ஒப்பந்ததாரர் செய்யாதுறைக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத சுமார் 500 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.