அதிமுக கட்சியில் பிளவு ஏற்பட்டு குழப்பம் நிலவி வருகிற சூழலில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் முன்பு அதிமுக மூத்த உறுப்பினர் சி.பொன்னையன், கன்னியாகுமரி நாஞ்சில் கே.எஸ்.கோலப்பனிடம் போனில் பேசியதாக ஆடியோ ஒன்றினை ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். அதில், தலைவர் காலத்திலிருந்து கஷ்டப்பட்டு வளர்த்த கட்சியின் நிலைமையை பார்க்கும்போது கஷ்டமாக இருப்பதாகவும், தொண்டர்களின் நிலையை நினைத்துப் பார்க்குமாறும் கூறும் கோலப்பனிடம், ஒன்றும் ஆகாது என சி. பொன்னையன் கூறுவது போல உள்ளது.
மேலும் அந்த ஆடியோவில், “ தொண்டர்கள் இரட்டை இலை பின்னாலும், தலைவர்கள் பணம் பின்னாலும் இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் தங்கமணி தன்னை காப்பாற்றிக்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் பக்கம் செல்கிறார். கே.பி.முனுசாமியும் ஸ்டாலினை திட்டுவதை நிறுத்திவிட்டார். ஒரு மாதத்திற்கு 2 கோடி ரூபாய் வருமானம் வரும் அளவில் கே.பி.முனுசாமி குவாரியை துரைமுருகனிடம் இருந்து டெண்டர் பெற்று விட்டார். திமுகவை நாம் திட்டுவதே இல்லை அண்ணாமலை தான் திட்டி வருகிறார். எடப்பாடி பழனிசாமி சிறைச்சாலை சென்றாலும் பரவாயில்லை என ஸ்டாலினை திட்டி வருகிறார். அதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
சி.வி.சண்முகம் அப்பாவும், நானும் சட்ட கல்லூரியில் வகுப்பு தோழர்கள். சி.வி.சண்முகம் பகலில் குடிக்கும் பழக்கம் உடையவர். பொதுக்குழுவில் சிவி சண்முகம் நாய் கத்துவது போல் கத்துகிறார். எடப்பாடி பழனிசாமியையும் ஓரங்கட்ட தயாராகி வருகின்றனர். பதவியை காப்பாற்றிக்கொண்டால் போதும் என எடப்பாடி பழனிசாமி முட்டாள்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறார். யாரும் கட்சிக்கு விஸ்வாசமாக இல்லை.” என்று அடுக்கடுக்கான பாயிண்ட்டுகள் அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆடியோவில் பேசியது தானல்ல என்று சி.பொன்னையன் புதிய தலைமுறையிடம் விளக்கம் அளித்துள்ளார்.
“ஆடியோவில் பேசியிருப்பது நான் அல்ல. மிகவும் கீழ்த்தரமான முறையில் மிமிக்ரி செய்து ஆடியோவை வெளியிட்டுள்ளனர். நான் இருக்கும் உயரிய இடத்திற்கு எந்த காண்டாமிருகத்திடமும் இப்படி பேச வேண்டிய அவசியமில்லை. எதிரிகளைப் பற்றிக் கூட நான் இவ்வாறு பேசமாட்டேன். அப்படி இருக்கையில் என் நண்பர்களைப் பற்றி நான் இவ்வாறு பேசியிருப்பதாகக் கூறுவது முற்றிலும் தவறு. இப்படி மோசடி செய்தவர்களுக்கு என் கடும் கண்டனத்தைப் பதிவு செய்து கொள்கிறேன். அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு இந்த மிமிக்ரி ஆடியோவை வெளியிட்டுள்ளனர்” என்று புதிய தலைமுறைக்கு விளக்கம் அளித்தார் சி.பொன்னையன்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM