புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (ஏஐ) எழுச்சியை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
டெல்லியில் நேற்று `பாதுகாப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்` என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றத்தை நம்மால் தடுக்க முடியாது. அதன் முன்னேற்றத்தை தடுக்க நாம் முயற்சி செய்யக்கூடாது. ஆனால் நாம் அதில் கவனமாக இருக்க வேண்டும். அதன் எழுச்சியை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கவேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் நமது நாடு மிகக் கவனமாக ஈடுபட வேண்டும். இந்தத் தொழில்நுட்பத்தால் பின்பற்றப்படும் சட்ட, நெறிமுறை, அரசியல் மற்றும் பொருளாதார எழுச்சியை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
எதிர்வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு நமது கட்டுப்பாட்டை மீறாமல் இருக்க நாம் எச்சரிக்கையுடன் செயல்படுதல் அவசியம்
ஒரு தொழில்நுட்பத்தின் வருகை ஒரு கடிகாரத்தின் இயக்கத்தைப் போன்றது. ஏனெனில் அது ஒரு முறை முன்னோக்கி நகர்ந்தால், அதைத் திரும்பப் பெற முடியாது. ஒரு புதிய தொழில்நுட்பம் வரும்போதெல்லாம், சமூகம் அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ள போதிய காலத்தை எடுத்துக்கொள்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பாதுகாப்புத்துறையும் முக்கியமான மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை நமது ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.