அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வந்த நிலையில், நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 16 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக பொது செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனிடையே, ஓ பன்னீர்செல்வம் நேற்று அதிமுக தலைமை அலுவலகம் சென்றார். அப்போது தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கற்களை வீசி ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்திக் கொண்டன. அதன் பிறகு காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தடியடி நடத்தி கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர்.
இதையடுத்து, அதிமுகவிலிருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் கட்சி விதிகளுக்கும், அதிமுகவிற்கு துரோகம் செய்யக்கூடிய வகைகளும் செயல்பட்டதால், அதிமுகவின் பொருளாளர் ஓ பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அதன்பிறகு, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் தர்ணா போராட்டம் நடத்தினர். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்துறையினர் வந்து, அலுவலத்திற்கு சீல் வைத்தனர்.
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறித்து வருகின்ற 25ஆம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என வருவாய்த்துறை ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இருவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் இரு தரப்பினரும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி உரிய உத்தரவு பெற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.