புதுடெல்லி: ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளுக்கு எதிராக கடந்த 6 மாதங்களில் மட்டும் 5.59 லட்சம் புகார்கள் வந்துள்ளன. இதில், 5,32,662 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒன்றிய அரசு துறைகளுக்கு எதிராக பொதுமக்கள் தங்களின் குறைகள், புகார்களை ஆன்லைன் மூலமாக, ‘பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு’ அமைப்பில் தெரிவிக்கலாம். இந்த புகார்கள் துறைகள் வாரியாக பிரிக்கப்பட்டு, அவற்றின் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, குறைகள் தீர்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் ஜனவரி முதல் கடந்த மாதம் 25ம் தேதி வரையிலான 6 மாதங்களில், ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளுக்கு எதிராக 5.59 லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஒன்றிய நிர்வாக சீர்திருந்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்க்கும் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த ஆண்டில் ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 25ம் தேதி வரையிலான காலகட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளுக்கு எதிராக மொத்தம் 5,59,094 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இவற்றில் 5,32,662 புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. நிதித்துறை (வங்கி பிரிவு), தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், நேரடி வரிகள் வாரியம், ரயில்வே துறை ஆகியவற்றுக்கு எதிராக அதிகளவில் புகார்கள் வந்துள்ளன. இந்த பட்டியலில் நிதித்துறை முதலிடத்தில் உள்ளது. இந்த துறைக்கு எதிராக 86,478 புகார்கள் வந்துள்ளன,’ என கூறப்பட்டுள்ளது.
