புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில், ஆற்றைக் கடக்க பாலம் இல்லாததால், பள்ளி மாணவர்கள் ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி உயிரைப் பணயம் வைத்து பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தின் பத்ராபூர் பகுதியில் உள்ள கிராமங்களில் ஆற்றைக் கடக்க பாலம் இல்லாததால், பள்ளிச் செல்லும் மாணவர்கள் ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி, அதன் துணையுடன் ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் சென்று வருகின்றனர். அதிகமான மழை மற்றும் ஆற்றில் வெள்ளம் வரும் காலங்களில் மாணவர்களால் ஆற்றைக் கடக்க முடியாதபோது அவர்கள் கிராமத்திலிருக்கும் பெரியவர்களின் உதவியுடன் ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் செல்கின்றனர்.
இதுகுறித்து, உள்ளூர்வாசியான ரவிந்தர நாயக் அளித்த பேட்டி ஒன்றில், “மாவட்டத்தில் அதிமாக மழைப் பெய்யும் காலங்களில், ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துவிடும். அப்போது குழந்தைகளால் சாதாரணமாக ஆற்றில் இறங்கிப் போக முடியாது. அந்தச் சூழ்நிலைகளில் ஆற்றின் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கு குறிக்கே அந்த கயிறு கட்டி, அதனைப் பிடித்துக் கொண்டு குழந்தைகளைப் பாதுகாப்பாக அக்கரைக்கு கொண்டு போய் விடுவோம். இது ஆபத்தான முயற்சிதான்” என்றார்.
மாணவர்களின் இந்த அவலநிலை குறித்து செய்தி வெளியான நிலையில், ஒடிசாவின் கல்வியமைச்சர் சமீர் ராஜன் தாஸ், அந்தத் தொகுதியின் எம்எல்ஏ மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கூறும்போது, “மாணவர்களின் இந்த நிலை குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை. நான் ஊடகங்களின் வாயிலாகத்தான் தெரிந்துகொண்டேன். உடனடியாக பிரச்சினைக்கு தீர்வு காணும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் எம்எல்ஏவுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.
மழைக்காலங்களில் சுற்றியுள்ள 15 கிராம மக்களும் இந்த ஆற்றைக் கடந்து சென்றுதான் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். தங்களின் அவல நிலை குறித்தும், ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித் தரக் கோரியும் பத்ராபூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தும் இன்னும் பாலம் கட்டித் தரப்படவில்லை என்று கிராமவாசிகள் ஆதங்கப்படுகின்றனர்.