தற்போது 10 எம்.எல்.ஏக்களும் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டிருப்பதால் கோவா காங்கிரஸில் பிளவு தற்போதைக்கு தவிர்க்கப்பட்டுள்ளது.
கோவாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் திகாம்பர் காமத், மைக்கேல் லோபோ உள்ளிட்ட 6 பேர் பாரதிய ஜனதா கட்சியில் சேர இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து, காங்கிரஸ் தரப்பில் அந்த எம்எல்ஏக்களை தொடர்பு கொள்ள முயன்ற போது அவர்களது செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்தித்துப் பேச முகுல் வாஸ்னிக்சை கோவாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனுப்பியுள்ளதாக ட்விட்டரில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் பதிவிட்டு இருந்தார்.
மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் 11 எம்.எல்.ஏக்களில் 10 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் திகம்பர் காமத் மட்டும் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படவிருப்பதாக செய்திகள் வெளியாகிய நிலையில் தற்போது 10 எம்.எல்.ஏக்களும் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டிருப்பதால் கோவா காங்கிரஸில் பிளவு தற்போதைக்கு தவிர்க்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM