ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபமாக வெளியான படம், ‘காஞ்சனா 3’. 2019-ம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் அதிகம் வசூலித்த படங்களில் ஒன்று. அதன் பிறகு, அவர் அக்ஷய் குமாரை வைத்து இந்தியில் இயக்கிய ‘லக்ஷ்மி’ வெளியானது. அது ‘காஞ்சனா’ படத்தின் ரீமேக். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. ஆனால், தனது கைவசம் நான்கு படங்களை வைத்திருக்கிறார்.
அதில் ஒன்று ‘ருத்ரன்’. தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் இது. இதில் லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்திருக்கிறார். லாரன்ஸுக்கு அடுத்து வெளியாக இருக்கும் படமும் இதுதான். இந்த வருடம் டிசம்பர் 25 அன்று வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, வெற்றிமாறன் எழுத்தில் துரை செந்தில்குமார் இயக்கும் ‘அதிகாரம்’ படம் இருக்கிறது. பின், அவரே இயக்கி நடிக்கும் ‘துர்கா’ என்ற படம். இந்த மூன்று படங்கள் இல்லாமல் ‘சந்திரமுகி 2’ இருக்கிறது.
லைகா தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடிப்பது யார் என்ற கேள்வி இந்தப் படத்திற்கான பேச்சு வார்த்தை தொடங்கியதிலிருந்தே இருந்து வருகிறது. த்ரிஷா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா என பெயர்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால், லட்சுமி மேனன் இந்தப் படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2016ல் வெளியான ‘றெக்க’ படத்திற்குப் பிறகு, அவர் ஐந்து வருடம் ப்ரேக்கில் இருந்தார். அதன் பின், சர்ப்ரைஸ் என்ட்ரியாக 2021ல் வெளியான ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தில் நடித்திருந்தார். தற்போது, யோகி பாபுவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகவா லாரன்ஸ், வடிவேலு, இசையமைப்பாளர் கீரவாணி, கலை இயக்குநர் தோட்டா தரணி, ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ஆகியோரை மட்டும் தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது லைகா நிறுவனம். இந்த மாதத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.