வழக்கமாக அரசு நிலங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்களையோ, புகழ் பெற்றவர்களின் பெயர்களைளோ வைப்பதுதான் வழக்கம். ஆனால், ஒடிசா மாநிலத்தில் சின்னஞ்சிறிய கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண்மணியின் பெயரை வைத்துள்ளது ஒடிசா வனத்துறை. அந்த வனப்பகுதிக்கு வைத்துள்ள பெயர் சரோஜினி வனம் என்பதாகும்.
சுதந்திர போராட்ட வீரர் சரோஜினி நாயுடுவின் மேல் அதிக மரியாதை கொண்டதன் காரணமாக அந்த வனப்பகுதிக்கு சரோஜினி வனப்பகுதி என்று பெயரிட்டுள்ளதாக நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால், அது உண்மையல்ல. ஒடிசா மாநிலத்தின் எல்லையை விட்டே இதுவரை தாண்டாத, 42 வயதான இல்லத்தரசி சரோஜினி மோகந்தாவின் பெயர் அந்த வனப்பகுதிக்கு சூட்டப்பட்டுள்ளது. இவர் போனாய்-க்கு அருகில் உள்ள அல்சுரேய் கிராமத்தில், தன்னுடைய கணவர், பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
இந்த போனாய் பகுதி, ஒடிசா மாநிலத்தில் உள்ள சுரங்கங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி. மாவட்ட கனிம அறக்கட்டளை திட்டத்தின் கீழ், வனப்பிரிவு நிதியைப் பெற்று அங்கு அழிக்கப்பட்ட வனத்தை மீண்டும் உருவாக்கும் திட்டத்தை கையிலெடுத்தனர் போனாய் வனத்துறையினர். அந்த தோட்டப் பகுதியை கவனிக்க, சரோஜினி மோகந்தாவின் தோட்டக் காப்பாளராக தினக்கூலி ஊழியராக ₹315 ரூபாய்க்கு பணியமர்த்தப்பட்டார். தன்னுடைய சீரிய முயற்சியால் அந்த 3 ஏக்கர் தோட்டத்தை, நன்கு வளர்ந்த ஒரு வனப்பகுதியாகவே மாற்றியுள்ளார் மோகந்தா.
சமீபத்தில் ஒடிசாவின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சிசிர் ரத்தோ, போனாய் வனப்பகுதிக்கு ஆய்விற்கு வந்திருந்தபோது, அங்கு நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த மூன்று ஏக்கர் வனப்பகுதியில் மரங்கள் நன்கு வளர்ந்து இருப்பதை கண்டு நெகிழ்ந்தார். இத்தனை அர்ப்பணிப்புடன் மரங்களை பராமரித்து பாதுகாத்து வந்த மோகாந்தாவையும் பாராட்டினார்.
இவரின் சீரிய அர்ப்பணிப்பை கெளரவிக்கும் வகையில், அந்தப் பெண்மணியின் பெயரையே, அந்த சிறு வனப்பகுதிக்கு சூட்ட உத்தரவிட்டார். இப்படித்தான் இந்த வனப்பகுதிக்கு ‘சரோஜினி வனம்’ என பெயர் உருவானது என, போனாய் வனப்பிரதேச அலுவலர் சனத் குமார் தெரிவித்துள்ளார்.
“பொதுவாக தினக்கூலியாக வருபவர்கள், தங்களது வேலை முடிந்ததும் கிளம்பிவிடுவார்கள். ஆனால், பொதுச்சொத்தை பராமரிப்பதில் சரோஜினி காட்டிய அர்ப்பணிப்பை, இதுவரை நான் பார்த்ததில்லை. வெயில் சுட்டெரிக்கும் மதிய நேரங்களில் கூட மரக்கன்றுகள் பராமரிப்பு பணியை செய்வார். மரக்கன்றுகளை, கால்நடைகள் மேய்வதற்கு செல்வதை பார்த்ததும் விரைந்து ஓடிச் சென்று கால்நடைகளை விரட்டுவார்” என்று சரோஜினி மோகந்தாவைப் பாராட்டுகிறார் வன அலுவலர் சனத் குமார்.
மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து காணப்படும் இவ்வனப்பரப்பில், ஒவ்வொரு மரத்தைப் பற்றியுமான தகவல்களை விரல் நுனியில் வைத்துள்ளார் சரோஜினி. மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றாவிட்டால் பட்டு போய்விடும் என்று எண்ணி, அதற்கு தண்ணீர் ஊற்றும் பணியை செவ்வனே செய்து வந்தார். அர்ப்பணிப்பே இந்தப் பெண்மணியின் பெயரை வனத்துக்கு சூட்ட காரணமாக இருந்தது என்கின்றனர் அந்தப் பகுதியினர்.
இதுகுறித்து பேசிய சரோஜினி, “மரக்கன்றுகள் உயிர்ப்புடன் வளர அதனை பராமரிப்பது மிகவும் முக்கியம். கரடுமுரடான இந்த மண்ணில் (ஒருவகை லேட்டரைட் மண்) மரங்கள் வளர்வதே மிக அரிதான விஷயம். குழி தோண்டி அதில் மண்புழு உரம் கொண்டு நிரப்பி மரம் நட்டு, அனைத்து மரக்கன்றுகளுக்கும் தொடர்ந்து தண்ணீர்ப் பாய்ச்சி வந்தேன்.
இந்த தோட்டத்தை சுற்றியுள்ள ஆறு கிராமங்களை சேர்ந்த கால்நடைகள், தினமும் தோட்டப்பகுதி அருகில் மேய்ச்சல் நிலங்களுக்கு செல்கின்றன. கால்நடைகள் தோட்டத்திற்குச் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம். இந்த கால்நடைகள் மேய்ச்சலை முடித்துவிட்டு, மாலை கொட்டகை திரும்பும் வரை நான் தோட்டப்பகுதிக்கு அருகில் காவல் நிற்கிறேன். இரண்டு ஆண்டுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பழம் தரும் மரங்களையும், மற்ற வகை மரங்களையும் தோட்டத்தில் வளர்ந்து நன்கு செழிக்க வைத்துள்ளேன்” என்கிறார்.
“சரோஜினி மோகந்தாவின் பெயரை சூட்டுவது ஒரு சிறிய செயலாகும். ஆனால் சுற்றுச்சூழல் மீது அன்பு கொண்ட ஒருவரின் செய்தியை பரப்புவது நீண்ட தூரம் செல்லும். மேலும், வனப்பாதுகாப்பு மற்றும் தோட்ட வேலைகளில் ஈடுபடுவோர் தங்கள் கடின உழைப்புக்கு வெகுமதி கிடைக்காது என்று நினைக்கின்றனர். சுற்றுச்சூழலுக்கு சாதாரண வேலைகளில் தங்களின் பங்களிப்பை அளிப்பவர்களின் பெயர்களும் வரலாற்றில் இடம்பெறும் என்பதற்கு இது ஓர் உதாரணம்” என்று தெரிவித்துள்ளார் மாவட்ட வன அலுவலர்.