சென்னை: ரயில் நிலையத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய 2 ரயில் நிலையங்களில் நிறுவப்பட்ட அதிநவீன ஸ்கேனர்கள் நேற்று பயன்பாட்டுக்கு வந்தன. தாம்பரம், செங்கல்பட்டு, பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி ஆகிய 6 நிலையங்களிலும் படிப்படியாக நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் முக்கிய ரயில் நிலையங்களாக உள்ளன. இந்த ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, இவ்விரு ரயில் நிலையங்களில் மிக முக்கிய நுழைவு வாயிலில் அதிநவீன ஸ்கேனர்கள் நிறுவும் பணி நடைபெற்று வந்தது. தற்போது, இப்பணிகள் முடிந்து, பயன்பாட்டுக்கு வந்தன. அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்ட ஒரு ஸ்கேனரின் மதிப்பு ரூ.45 லட்சம்.
இதுகுறித்த ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: இந்த ஸ்கேனர், ஒரு மணி நேரத்தில் 300 முதல் 500 உடைமைகளை சோதிக்கும் திறன்மிக்கது. சிறப்பான கண்காணிக்கும் திறன் உடையது. ஆரஞ்சு, பச்சை, நீலம் ஆகிய வண்ணங்களில் பொருட்களை குறித்து, அடையாளப்படுத்தும். இதுபோல தாம்பரம், செங்கல்பட்டு, பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி ஆகிய 6 நிலையங்களில் படிப்படியாக நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.