திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் மற்றும் சிபிஎம் (மார்க்சிஸ்ட் கட்சி) எம்எல்ஏ சச்சின் தேவ் ஆகியோரின் திருமணம் செப்டம்பர் 4ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தின் மேயராக இருப்பவர் ஆர்யா ராஜேந்திரன் (23). கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் முடவன்முகள் வார்டில் சிபிஎம் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் போட்டியிட்டபோது அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் இளங்கலை இறுதி ஆண்டு படித்து வந்தார். அப்போது அவருக்கு வயது 21. தேர்தலில் போட்டியிடும் போது அவர் திருவனந்தபுரத்தின் மேயராக நியமிக்கப்படுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. சிபிஎம் சார்பில் மேயராக வரலாம் என கருதப்பட்டவர்கள் தேர்தலில் தோல்வியடைந்தனர்.இதனால் யாரை மேயராக நியமிக்கலாம் என்று சிபிஎம் தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்தனர். சில மூத்த தலைவர்கள் அந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்த போதிலும் மேயராகும் வாய்ப்பு 21 வயது மட்டுமே ஆன ஆர்யா ராஜேந்திரனுக்கு கிடைத்தது. இதன் மூலம் இந்தியாவிலேயே மிக இளம் வயதில் மேயர் பொறுப்பை ஏற்ற பெண் என்ற பெருமையை ஆர்யா ராஜேந்திரன் பெற்றார். மேயர் ஆன பிறகு கல்லூரிக்கு சென்று அவர் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். இந்த நிலையில் அவருக்கும், கோழிக்கோடு மாவட்டம் பாலுசேரி தொகுதி சிபிஎம் எம்எல்ஏவான சச்சின் தேவுக்கும் (28) திருமணம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. செப்டம்பர் 4ம் தேதி திருவனந்தபுரத்தில் வைத்து இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. கேரளாவில் தற்போதைய எம்எல்ஏக்களில் சச்சின் தேவ் தான் வயதில் குறைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிபிஎம்மின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பின் அகில இந்திய இணை செயலாளரான இவர், கேரளாவில் கடந்த வருடம் நடந்த தேர்தலில் பாலுசேரி தொகுதியில் 20,372 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.