சென்னை: செஸ் ஒலிம்பியால் போட்டியை நேரில் காண்பதற்கான வாய்ப்பு அளிக்கும் செஸ் போட்டிகள் நாளை தமிழகம் முழுவதும் தொடங்குகிறது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 28-ம் தேதி ஆகஸ்ட் 10ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி பள்ளி அளவிலான போட்டிகள் நாளை தொடங்குகிறது.
இதன்படி தென்காசி இ.சி.ஈ. அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்தப் போட்டிகளை தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து நாளை முதல் அனைத்து பள்ளிகளில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளது.
1-5, 6-8, 9-10, 11-12 என நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடைபெறுகிறது. 9-10 மற்றும் 11-12 வகுப்புப் பிரிவுகளில் வெற்றிபெறும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் இரு பிரிவுகளில் இருந்தும் தலா இரண்டு மாணவர்களும் மாணவிகளும் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒரு மாவட்டத்திற்கு 8 மாணவர்கள் என்கிற அளவில் 38 மாவட்டங்களையும் சேர்த்து 152 மாணவர்களும், 152 மாணவிகளும் என 304 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைக் காண சென்னை அழைத்து வரப்படுவர்.