சேலம் எட்டு வழிச்சாலைக்கான 90 % நிலம் கையகப்படுத்தப்பட்டால் மட்டுமே திட்டபணிகள் தொடங்கும் எனவும், அதே சயம் மக்கள் முழுமையாக எதிர்த்தால் திட்டம் கைவிடப்படும் என்று மத்திய சாலை மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி. கே. சிங் தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில் வேலுார் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம், வேலுாரில் நேற்று நடைபெற்றது. இதில் இணை அமைச்சர் வி.கே. சிங் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது : தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு தேவையான, 90 % நிலம் கையகப்படுத்தப்பட்டால் மட்டுமே, இந்த திட்டப்பணிகள் துவக்கப்படும்.
அதே சமயம், இதில் மக்களுக்கு எதிர்ப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படும். தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற, மத்திய அரசுக்கு, மாநில அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது. நாடு முழுதும் சுங்கச்சாவடிகள் என்பதே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்கு. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் மின்னணு முறையில் சுங்கம் வசூலிப்பு முறையை அமல்படுத்தி, அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். என்று அவர் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்கும் பணி நடந்து வருவதாகவும் விரைவில் இந்த பணி முடிக்கப்பட்டு, விமான சேவைக்கு திறக்கப்படும் என்று அவர் கூறினர். மேலும் சென்னையில் புதிதாக பசுமை விமான நிலையம் அமைக்க இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றும் அவற்றில் எந்த இடம் எதிர்கால வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் என்பதை மாநில அரசு தெரிவித்தால், அந்த இடத்தில் பசுமை விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.