டோக்கியோ: ஜப்பான் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (67) கடந்த 8-ம் தேதி நாரா பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கடற்படை முன்னாள் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அபே உயிரிழந்தார்.
இதையடுத்து ஷின்சோ அபே உடல் டோக்கியோவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் புமியோ கிஷிடா, உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் அபே உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அந்நாட்டு நாடாளுமன்ற மேலவைக்கு திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்தார். இதன்படி நேற்றுமுன்தினம் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து தொடங்கிய வாக்குகள் எண்ணும் பணி நிறைவடைந்தது.
125 இடங்களுக்கு நடந்த இந்தத் தேர்தலில் ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சி 63 இடங்களிலும், கூட்டணி கட்சி 13 இடங்களிலும் வெற்றி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணிக்கு 49 இடங்கள் மட்டுமே கிடைத்தன. எனினும் தேர்தல் முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஜப்பானில் மேலவைக்கு குறைவான அதிகாரமே உள்ளது. எனினும், இந்த வெற்றி கிஷிடாவின் செயல்பாட்டுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் கிஷிடா முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு இந்த வெற்றி உதவும் என கூறப்படுகிறது.