சென்னை ஒக்கியம் துரைபாக்கத்தைச் சேர்ந்தவர் சேஷன், இவர் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும். என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், ‘‘ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நாட்டு மாடுகள் தான் என்பதற்கான கால்நடை மருத்துவர்களின் சான்றிதழ்கள் அளிக்கப்பட வேண்டும்.
போலியான சான்றிதழ்கள் அளிக்கப்பட்டால், சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். செயற்கை கருத்தரித்தல் முறையைத் தவிர்க்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில், “ஜல்லிக்கட்டு போட்டிகளில் அனைத்து வகையான மாடுகளும் அனுமதிக்க பட வேண்டும். நாட்டு இன மாடுகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, நாட்டு இன மாடுகளை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளில் அனுமதிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.