வாஷிங்டன்,
நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட உலகின் மிகப்பெரிய சக்தி மற்றும் திறன் வாய்ந்த ‘ஜேம்ஸ் வெப்’ விண்வெளி தொலைநோக்கி, பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் கடந்த டிசம்பர் மாதம் 25-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய மதிப்பில் சுமார் 75 ஆயிரம் கோடி என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து ஆய்வாளர்கள் இந்த தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர். நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவுக்கு சென்று, சூரியனை சுற்றியவாறு தனது ஆய்வுப்பணியை மேற்கொள்ளும். பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டுபிடிக்கும் சக்திகொண்ட இந்த தொலைநோக்கி நவீன மனித குலம் முன்பு அறிந்திடாத பல அரிய தகவல்களை அடுத்த சில ஆண்டுகளுக்கு அளிக்க உள்ளது.
அந்த வகையில், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு நாளை வெளியிட உள்ளது. அதற்கு முன்னோட்டமாக ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட முதல் வண்ணப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இதனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக நாசா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “இன்று வரை பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் கூர்மையான அகச்சிவப்பு காட்சி. அது நமக்கு கண்ணுக்கு தெரியாத விண்மீன் திரள்களைக் காட்டுகிறது. தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு ஜீலை -12 அன்று வெளியிடப்படும்” என பதிவிட்டுள்ளது.